ҽ

வத்திக்கான் நகர நீதித்துறையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் நகர நீதித்துறையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

வத்திக்கான் நீதித்துறையின் 95ஆவது ஆண்டு தொடக்கம்

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்களில் கூட, மாறுபட்ட சூழல்களைத் தெளிந்து தேர்தல் மற்றும் இறைநம்பிக்கையுடன் எதிர்கொள்ள துணிவு தேவை

மெரினா ராஜ் - வத்திக்கான்

துயரத்தில், ஆற்றலுள்ள உடனிருப்பில், நல்லதை விடாமுயற்சியுடன் தேடுவதில் சோதனைகளை முறியடிப்பதில், அதனை எதிர்கொள்வதில் துணிவுடன் செயல்பட வேண்டும் என்றும், இது வீரச்செயலை மட்டுமன்று, கிறிஸ்துவை சந்திப்பதற்கான கொடையையும் ஆற்றலையும் வழங்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 2 சனிக்கிழமை வத்திக்கான் நகர நீதித்துறையின் 95ஆவது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, நீதித்துறை நீதிபதிகள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணிவு என்னும் பண்பினைத் தூய ஆவியை அழைப்பதன் வழியாக கொடையாக அனைவரும் பெறலாம் என்றும் கூறினார்.

நம்பிக்கை மற்றும் கடவுளின் உடனிருப்பை அடிப்படையாகக் கொண்ட உறுதியான தாழ்ச்சியை, துணிவானது பெற்றுள்ளது என்றும், ஒரு குறிப்பிட்ட வழியில் விடாமுயற்சியுடன் செயல்படும் திறனில் துணிவு வெளிப்படுத்தப்படுகின்றது, நன்மை செய்வதைத் தடுக்கும் உள்புற வெளிப்புற நிலைமைகள நிராகரித்து, பொறுமையோடும் விடாமுயற்சியோடும் வாழ வலியுறுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துணிவுடன் செய்யப்படும் பணி 

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்களில் கூட மாறுபட்ட சூழல்களை தெளிந்து தேர்தல் மற்றும் இறைநம்பிக்கையுடன் எதிர்கொள்ள துணிவு தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இவையின்றி செய்யப்படும் செயல்கள், சிறிய மற்றும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் கூறினார்.

தன்னை முன்னிலைப்படுத்துவதை இலக்காகக் கொள்ளாமல், அச்சம், பலவீனம் போன்ற சுமைகளைச் சுமக்கின்ற, உடன்வாழும் சகோதர சகோதரிகளோடு, தங்களது ஒன்றிப்பை துணிவின் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், மிகவும் கடினமான சோதனைகளை அனுபவிக்கும் பல ஆண்களும் பெண்களும் இத்தகைய துணிவினைக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது துன்புறுத்தப்பட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் உட்பட பலர் மீது, தொடர்ந்து நடத்தப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி சிந்திப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இந்த அநீதிகளை எதிர்கொள்ள, தூய ஆவியானவர்  ஆற்றலைத் தருகின்றார் என்றும், இத்தகைய ஆற்றல் நம்மில் நியாயமான கோபத்தையும், துணிவையும் ஏற்படுத்துகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய துணிச்சலுடன் அன்றாட வாழ்வில், குடும்பத்தில், சமுதாயத்தில் ஏற்படும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளவும், குழந்தைகளின் எதிர்காலம், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாத்தல், நமது தொழில்சார் பொறுப்புகளை ஏற்றல் போன்றவற்றிற்காக வாழ நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சகோதரக் குறை திருத்தம்

நீதியானது இரக்கத்துடன் வழங்கப்பட வேண்டும், சகோதர உறவுடன் குறைகள் சுட்டிக்காட்டப்பட உதவ வேண்டும் என்றும், இவை இரண்டும் இல்லாத ஞானமானது மலட்டுத்தன்மை கொண்ட ஞானமாக இருக்கும் என்றும் கூறிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையைக் கடுமையாகக் கண்டறிவதில் துணிவு வேண்டும், நீதி வழங்குதல் என்பது ஒரு பிறர் நலப்பணி, சகோதர குறைத்திருத்தத்திற்கான ஒரு வாய்ப்பு, என்றும் கூறினார்.

தேவையான தெளிந்துதேர்தலுக்கான தூய ஆவியின் ஒளியினை செபத்தின் வழியாகப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முழங்கால்படியிட்டு செபிப்பதன் வழியாக நாம் சார்ந்திருக்கும் சமூகம் அனைத்திற்கும் அந்த ஒளியினைப் பெற்றுத்தர முடியும் என்றும் கூறினார்.

நீதியை நிர்வகிப்பது ஒரு தற்காலிகத் தேவை மட்டுமல்ல. அது ஒரு நற்பண்பு, உண்மையில், அதை வளர்ப்பதற்கு, அதிகார வரம்பில் முதலீடு செய்பவர்களின் தனிப்பட்ட, தாராளமான மற்றும் பொறுப்பான அர்ப்பணிப்பு அவசியம் என்றும், அந்த அர்ப்பணிப்பு செபத்தின் வழியாக ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2024, 15:46