ҽ

வத்திக்கான் பொது பாதுகாப்பிற்கான ஊழியர்கள் மற்றும்  மேலாளர்களுடன் திருத்தந்தை வத்திக்கான் பொது பாதுகாப்பிற்கான ஊழியர்கள் மற்றும் மேலாளர்களுடன் திருத்தந்தை  (ANSA)

மனிதகுலத்திற்கான நல்ல பணியாளர்கள் பொதுப்பணியாற்றுபவர்கள்

“பொதுப்பணிக்கான அர்ப்பணம் என்பது மிகவும் கடினமானது, இதனைச் செய்ய நல் விழுமியங்கள் தேவை, எல்லாவற்றிற்கும் மேலாக முழுமையான அர்ப்பண உணர்வும் தியாகமும் தேவை” - திருத்தந்தை புனித 23ஆம் யோவான்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பொதுநன்மைக்காக உழைக்கும் பணியாளர்கள் அனைவரும், மனித குலத்திற்கான நல்ல பணியாளர்கள், சமூகத்தில் அமைதியை உருவாக்குபவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள் என்றும்,  தேவையில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரையும் காக்கும் பொறுப்பு கொண்டவர்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

பிப்ரவரி 10 சனிக்கிழமை வத்திக்கான் பொது பாதுகாப்பிற்கான ஊழியர்கள் மற்றும்  மேலாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் அர்ப்பணிப்புள்ள பணிக்காகத் தன் நன்றியினையும் தெரிவித்தார்.

வத்திக்கானுக்கு வரும் திருப்பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என அனைவருக்கும் அமைதியான சூழலையும் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக, சிறப்பாக செயல்படும் அவர்களின் பணி பாராட்டிற்குரியது என்றும், திருத்தந்தையின் உரோம் மற்றும் இத்தாலிய பயணங்களின்போது அதற்கேற்றவாறு தங்கள் பணியின் காலஅட்டவணையை மாற்றிக்கொள்ளும் அவர்களின் செயலுக்காகவும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை.

துணிவு, கூர்மை, கவனம், புரிதல் போன்ற பண்புகளைக் கொண்டு நோயாளிகளைப் பாதுகாத்தல், நகரை மேற்பார்வையிடுதல், ஆபத்தான சூழ்நிலைகளை நிர்வகித்தல், போன்ற பணிகளை ஆற்றும் ஊழியர்கள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், உதவி தேவைப்படுபவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சிக்கல்களைத் தீர்த்து அவர்களுக்கான பணியினை சிறப்பாக ஆற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“பொதுப்பணிக்கான அர்ப்பணம் என்பது மிகவும் கடினமானது, இதனைச் செய்ய நல் விழுமியங்கள் தேவை, எல்லாவற்றிற்கும் மேலாக முழுமையான அர்ப்பண உணர்வும் தியாகமும் தேவை” என்ற திருத்தந்தை புனித 23ஆம் யோவானின் வார்த்தைகளை மேற்கோள்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எனவே தான் மனித குலத்திற்கான நல்ல பணியாளர்கள், சமூகத்தில் அமைதியை உருவாக்குபவர்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பொதுநன்மை மற்றும் அமைதி என்பது தன்னிச்சையாக மேம்படுத்தப்படவோ வளரவோ முடியாது என்றும் கூறினார்.

மனித வாழ்க்கையின் ஒளியும் இருளும் பாவத்தாலும் காயத்தாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், எப்பொழுதும் அனைவரின் நலனை இதயத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2024, 14:01