ҽ

ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

கடவுளின் உடன்பணியாளர்களான கைவினைஞர்கள்

கைவினைஞர்கள் ஒவ்வொருவரும், கடவுள் நம் கைகளில் கொடுத்திருக்கும் பொருளின் மதிப்பையும் அழகையும் அடையாளம் காணவும், பிறர் அடையாளம் காணவும் உதவுகின்றார்கள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கைவினைஞர்கள் அனைவரும் கடவுளின் உடன்பணியாளர்கள், உலகை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்க அழைப்படுபவர்கள் என்றும், கைவினைத்தொழில் புரிவோரின் செயல்பாடுகள் மனிதனின் அறிவாற்றலையும், படைப்பாற்றலையும் மேம்படுத்துகின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 10 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலியின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த Confartigianato என்னும் கைவினைத்தொழில் புரிவோர் மற்றும் தொழில்முனைவோர் அமைப்பின் கூட்டமைப்பாளர்கள் ஏறக்குறைய 5000 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கைவினைஞர்களின் கைகள், கண்கள், கால்கள் என உடலின் உறுப்புக்களுடன் கைவினைச்செயல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்து தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கைகள்

கடவுளின் படைப்பு வேலைகளில் பங்கேற்க வைக்கும் கைவினைஞர்களின் கைகளானது, கைகளின் திறமை, இதயத்தின் ஆர்வம், மனதின் யோசனைகள் போன்றவற்றை எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதை அறியும் திறனை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

“குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்” என்ற எரேமியா இறைவாக்கினரின் வார்த்தைகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், கடவுளின் உடன்பணியாளர்களாக பலவற்றை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கைவினைத்தொழில் புரிவோரின் கைகள் நன்கு அறிந்துள்ளன என்றும் கூறினார்.

கைவினைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் கைகள், அதன் துணைகொண்டு ஆற்றும் அளப்பரிய பணி போன்றவற்றிற்காக இறைவனைப் போற்றுங்கள், நன்றி கூறுங்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எல்லாரும் இச்செயலைச் செய்யும் அரிய வாய்ப்பைப் பெறவில்லை என்றும்,  செய்யும் செயல்களில் சோர்வடையாது தொடர்ந்து தங்கள் பணிகளை ஆற்ற வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார்.

விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், பலவீனமானவர்கள்,  இளைஞர்கள், பெண்கள் புலம்பெயர்ந்தோர், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் என அனைத்து மக்களின் நலனுக்காக அவர்களோடு இணைந்து ஆற்றும் பணிக்காகத் தன் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் திருத்தந்தை.

அரங்கத்தில் கூடியிருந்தோர்
அரங்கத்தில் கூடியிருந்தோர்

பொருளின் மதிப்பை, அழகை அடையாளம் காணும் கண்கள்

சாதாரண பொருளில் ஒரு தலைசிறந்த படைப்பை உருவாக்கும் கைவினைஞர்கள், அதை உருவாக்குவதற்கு முன்பே அது என்ன என்பதை அடையாளம் காணும் திறனைக் கொண்ட கண்களைப் பெற்றவர்கள் என்றும், வெறும் மரத்துண்டாக மற்றவர்கள் கண்களுக்கு காட்சியளிப்பது கைவினைஞர்களின் கண்களுக்கு இசைக்கருவியாக நாற்காலியாக தெரிகின்றது என்றும் கூறினார்.

இயேசு தச்சுத்தொழிலை, தனது வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பிடம் இருந்து கற்றுக்கொண்டார், தொழிலின் மதிப்பையும் மாண்பையும் அறிந்து கொண்டார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், படைப்பு என்பது ஒரு கொடை என்றும், மகிழ்ச்சி மற்றும் இறைப்புகழ்ச்சியில் நாம் சிந்திக்கும் மகிழ்ச்சியான மறைபொருள் என்றும் எடுத்துரைத்தார்.

கைவினைஞர்கள் ஒவ்வொருவரும், நிகழ்காலத்தின் மீது வெவ்வேறு பார்வையைக் கொண்டிருக்கவும், கடவுள் நம் கைகளில் கொடுத்திருக்கும் பொருளின் மதிப்பையும் அழகையும் அடையாளம் காணவும், பிறர் அடையாளம் காணவும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மக்கள் மத்தியில் திருத்தந்தை
மக்கள் மத்தியில் திருத்தந்தை

பயணத்தோழர்களாக நடக்க உதவும் கால்கள்

கைவினைஞர்களின் தயாரிப்புக்கள் அனைத்தும் உலகம் முழுவதும் பயணம் செய்து,  அழகுபடுத்தி, மக்களின் தேவையை நிவர்த்தி செய்கின்றன என்றும், கைவினைத்திறன் என்பது பணியாற்றுதல், கற்பனை ஆற்றலை மீட்டெடுத்தல், வாழ்க்கை சூழல்கள் மற்றும் நிலைமைகளை மாற்றுதல், மேம்படுத்துதல் போன்றவற்றிற்கான ஒரு வழி என்றும் கூறினார் திருத்தந்தை.

நல்ல சமாரியன் தன் அயலாருக்கு உதவும்போது, கீழே குனிந்து காயமுற்றவரைத் தூக்கி நிற்க வைத்து, அவரது காயங்களை குணப்படுத்த முயன்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இதுபோன்று வழியில் விழுந்த பலரைச் சந்திக்க அவரது மாண்பை மதித்து உயர்த்த நம் கால்கள் பயணிக்கட்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2024, 13:39