ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

நமது உணவுக் கழிவுகள் பசியுள்ள அனைவருக்கும் உணவளிக்க முடியும்!

பெண்கள் கிராமப்புறங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இன்றைய நம் உலகம் உணவு தொடர்பான இதயத்தை உடைக்கும் இருவேறுபாட்டை எதிர்கொள்கிறது என்றும், ஒருபுறம், இலட்சக் கணக்கான மக்கள் பசியால் வாடுகின்றனர், மறுபுறம், உணவை வீணாக்குவதில் பெரும் உணர்வின்மை காணப்படுகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

பன்னாட்டு விவசாய மேம்பாட்டு நிதியத்தின் (IFAD) 47-வது கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு, பிப்ரவரி 14, இப்புதனன்று அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உணவுக் கழிவுகள், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்கின்றன என்றும், அதேவேளை, நாம் விரயமாக்கும் இந்த உணவுப் பொருள்கள் பசியுள்ள அனைவருக்கும் உணவளிக்க போதுமான அளவுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

காலநிலை மாற்றம், வளங்களை சூறையாடுதல் மற்றும் இலட்சக்  கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் எண்ணற்ற மோதல்கள் ஆகியவற்றை இந்தக் கடிதத்தில் விவரித்துள்ள திருத்தந்தை, நாம் உலகை ஆபத்தான வரம்புகளுக்குத் தள்ளுகிறோம் என்றும் எச்சரித்துள்ளார்.

பூர்வ இன மக்களும் துன்பங்கள், பற்றாக்குறை மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இயற்கை வள மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலுடனான அவர்களின் தொடர்பு பல்லுயிர்களைப் பாதுகாக்க உதவும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சமூகத்தில் புறக்கணிப்பட்ட இன்னொரு குழுவினராகிய பெண்களைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இப்பெண்கள் கிராமப்புறங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றனர் என்றும், அங்கு இளைஞர்கள் பலருக்குப் பயிற்சி, வளங்கள் மற்றும் வாய்ப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதார்த்தம், தற்போதுள்ள பிரச்சனைகளை, குறிப்பாக பசி மற்றும் வறுமையை எதிர்கொள்ள நம்மைத் தூண்டுகிறது என்றும், சுருக்கமான உத்திகள் அல்லது அடைய முடியாத அர்ப்பணிப்புகளுக்குத் தீர்வு காண்பதன் வழியாக அல்ல, மாறாக கூட்டு நடவடிக்கையிலிருந்து உருவாகும் நம்பிக்கையை வளர்ப்பதன் வழியாக வறுமையை நாம் எதிர்கொள்ள முடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, நம்பிக்கையுடன் கூடிய ஒத்துழைப்பு மற்றும் சேவை மனப்பான்மை உங்கள் ஆலோசனைகளை வழிநடத்தும் என்றும், இதன்விளைவாக விலக்குதல், வறுமை மற்றும் வளங்களைத் தவறாக நிர்வகித்தல், மற்றும் காலநிலை மாற்ற நெருக்கடிகளின் விளைவுகள் ஆகியவை அகற்றப்பட முடியும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2024, 14:37