ҽ

அமைதிக்கான செபம் என்பது மனித குடும்பத்தின் பொறுப்பு

நல்ல உணர்வுகள், கவனமுள்ள செயல்கள் போன்றவற்றின் வழியாக மனித உடன்பிறந்த உணர்வு கொண்ட சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதிக்கான செபம் என்பது ஒரு சிலரின் பொறுப்பல்ல மாறாக ஒட்டுமொத்த மனித குடும்பத்தின் பொறுப்பு என்றும், இரக்கம் மற்றும் துணிவின் செயல்கள் வழியாக அமைதியை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுதியில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மக்கள் அனைவரும் மிகுந்த ஏக்கத்துடன் உலக அமைதிக்காக இறைவனின் அருளை நாடுகின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.

பிப்ரவரி 10 அன்று, நிலவுப் புத்தாண்டைக் கொண்டாடும், கிழக்கு ஆசியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலட்சக் கணக்கான குடும்பங்கள் மற்றும் மக்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நல்ல உணர்வுகள், கவனமுள்ள செயல்கள் போன்றவற்றின் வழியாக மனித உடன்பிறந்த உணர்வு கொண்ட சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்றும், வரவேற்கப்படல், அங்கிகீகரிக்கப்படல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனித் மாண்புடன் நடத்தப்படும் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாழ்க்கையின் ஆற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது என்ற கருப்பொருளில்  இத்தாலியில் கொண்டாடப்படும் வாழ்க்கைக்கான நாள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு மனித வாழ்க்கையும், வரம்புகளால் குறிக்கப்பட்டிருந்தாலும், மகத்தான மதிப்பை, மாண்பைக் கொண்டுள்ளது, மற்றவர்களுக்கு கொடுக்கும் திறன் கொண்டது என்ற இத்தாலிய ஆயர்களின் கருத்துக்களுடன் தனது கருத்துக்களையும் இணைப்பதாக எடுத்துரைத்தார்.

மேலும் பிப்ரவரி 8 திருஅவையில் சிறப்பிக்கப்படும் தூய ஜோசப்பின் பகிதா நினைவுநாள் அன்று மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக செபநாள் சிறப்பிக்கப்படுவது பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சூடான் நாட்டு அருள்சகோதரியான தூய பகிதா போல இன்றும் பல சகோதர சகோதரிகள் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு, சுரண்டலுக்கும் முறைகேடுகளுக்கும் ஆளாகின்றனர் என்று எடுத்துரைத்து மனித வர்த்தகம் என்னும் உலககளாவிய நிகழ்வை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்துப் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய சிலியைத் தாக்கிய பேரழிவுகரமான தீயில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையின் பாதையில் அமைதியின் பணியாளர்கள், என்ற தலைப்பில் கத்தோலிக்கத் துறவு சபைகள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புகளுக்கான திருப்பீடத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பங்கேற்கும் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளையும் வாழ்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2024, 14:00