ҽ

காசாவில் உள்ள திருக்குடும்ப கோவில் பங்குத்தளம் காசாவில் உள்ள திருக்குடும்ப கோவில் பங்குத்தளம்  

கர்தினால் பிட்சபாலாவுடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்!

பிப்ரவரி 7, புதன்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இத்தொலைபேசி உரையாடலின்போது, முக்கியமாக இப்பங்குதளத்தின் உள்ள மக்களின் தற்போதைய நிலையை மையப்படுத்தியதாக இருந்தது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தொடக்கமுதல் இன்றுவரை தனது உடனிருப்பையும் ஆதரவையும் வழங்கிவரும் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்களுக்கு நன்றிகூறும் விதமாக அவருடன் தொலைபேசியில் உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தொலைபேசி அழைப்பின்போது, காசாவில் உள்ள திருக்குடும்பக் கத்தோலிக்க பங்குத்தளத்திலுள்ள போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது செபத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை.

கர்தினால் பிட்சபாலா அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட அண்மைய  தொலைபேசி அழைப்பு பிப்ரவரி 7, புதன்கிழமை அதிகாலையில் நிகழ்ந்தது, இத்தொலைபேசி உரையாடல், முக்கியமாக இப்பங்குதளத்தில் உள்ள மக்களின் தற்போதைய நிலையை மையப்படுத்தியதாக இருந்தது.

காசாவின் திருக்குடும்ப பங்குத்தளத்தின் பணியாளர் கபிரியேல் ரோமானெல்லி மற்றும் உதவி பங்குப் பணியாளர்  யூசுப் அசாத் ஆகியோருடன் ஏறக்குறைய தினமும் தொடர்பு கொண்டு அங்குள்ள போர் மற்றும் மக்களின் நிலை குறித்து பற்றி விசாரிக்கிறார் திருத்தந்தை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

காசா முழுவதும் உள்ளதைப் போலவே, இப்பங்குத் தளமும் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இப்பங்குதளத்திலுள்ள மக்கள் வெப்பமூட்டும் கருவிகளின்றி கடுங்குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலும் கூட, ஒரு பள்ளியை உள்ளடக்கிய இப்பங்குதளம் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புகலிடமும் ஆதரவும் அளித்து வருகின்றது,

பிப்ரவரி 7, இப்புதனன்று நிகழ்ந்த திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு, உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் போர்களை மறந்துவிடாதீர்கள் என்று அங்குக் குழுமியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை,  குறிப்பாக, புனித பூமியில் நடந்து வரும் போரால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, உக்ரைன் மற்றும் மியான்மாரின் ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோரையும் மற்றும் உலகெங்கினும் நிகழ்ந்து வரும் பல்வேறு போர்களையும் குறிப்பிட்டார்.

மேலும் அமைதிக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் என்றும், போர் எப்போதும் தோல்வியைத்தான் தரும் ஆகவே, அமைதிக்காக செபிப்போம், நமக்கு அமைதி தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2024, 15:03