ҽ

Diaconie de la beauté அமைப்பினர் Diaconie de la beauté அமைப்பினர்   (Vatican Media)

கலை, இயற்கையின் அழகைத் தெரிவிக்கும் வலிமைவாய்ந்த ஊடகம்!

இன்றயைச் சூழலில், வித்தியாசமான, அழகான உலகத்தை கனவு காணும் திறன் கொண்ட ஆண்களும் பெண்களும் நமக்குத் தேவைப்படுகின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாமணிக்கம் - வத்திக்கான்

சகோதரர் சகோதரிகளே, மக்களுக்கிடையே, கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கிடையே நல்லிணக்கப் பாடகர்களான இருக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும், அனைத்து வகையான வன்முறைகளாலும், போர்களாலும், சமூக நெருக்கடிகளாலும் நமது மனிதநேயம் அச்சுறுத்தப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 15, இவ்வியாழனன்று, Diaconie de la beauté என்ற அமைப்பின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆன்மிகம், நிகழ்வுகள், உறைவிடம் ஆகிய மூன்று பரிமாணங்களைப் பற்றிய சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

01. ஆன்மிகம்

விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே ஒரு பாலத்தை உருவாக்க கலைஞர்களுக்கு உதவுவதே உங்கள் பணி என்று கூறிய திருத்தந்தை, நீங்கள் இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் அல்லது பாடகர்கள், ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் அல்லது இயக்குநர்கள், சிற்பிகள், நடிகர்கள் அல்லது நடனக் கலைஞர்கள் அல்லது வேறு யாராக இருந்தாலும், அவர்களிடத்தில் உண்மைக்கான தேடலை அவர்களிடம் எழுப்ப வேண்டும். ஏனென்றால், அழகு நம்மை உலகில் வித்தியாசமான வழிகளில் வாழ்வதற்கு அழைக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

உண்மையில்,  வாழ்க்கை முழுமையை நோக்கிச் செல்கிறது என்பதை அழகு நமக்கு உணர்த்துகிறது என்றும், உண்மையான அழகில் நாம் கடவுளுக்கான ஏக்கத்தை உணரத் தொடங்குகிறோம் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, படைப்பாளரான கடவுளை நம்புவது, உயிரினம் தன்னைத் தாண்டிச் செல்லவும், கலை அகவெழுச்சி வழியாக தெய்வீக வாழ்க்கையில் தன்னை முன்னிறுத்தவும் ஊக்குவிக்கும் என்றும் விளக்கினார்.

02. நிகழ்வுகள்

Diaconie de la beauté என்ற உங்களின் அமைப்பு கூட்டங்கள், காட்சிகள், இசையரங்கு நிகழ்ச்சிகள், செயல்திறன்கள் வழியாகத் திருஅவையுடன் ஒரு பயனுள்ள உரையாடலை மீண்டும் நிறுவ கலைஞர்களுக்கு உதவுகிறது என்று கூறிய திருத்தந்தை, கலைஞர்கள் விசுவாசிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையுடன் நீங்கள் உரையாடலில் ஈடுபடுவதன் வழியாகத் திருஅவையுடன் நெருக்கத்தை காணக்கூடிய ஒரு வழியாக இது அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

03. உறைவிடம்

உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களின் இல்லங்களை நிறுவுவதன் வழியாக, உங்கள் பணி பலமடங்கு உயர்ந்துள்ளது என்றும், ஒரு கலைஞரின் வாழ்க்கை பெரும்பாலும் தனிமையாலும், சில நேரங்களில் மனச்சோர்வு மற்றும் பெரும் உள்துன்பத்தாலும் குறிக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

ஓர் ஆணிலோ அல்லது பெண்ணிலோ மறைந்திருக்கும் அழகை வெளிக்கொணர்வதே உங்களின் சவாலாக உள்ளது என்றும், இதனால் அந்த ஆணோ அல்லது அந்தப் பெண்ணோ இந்த அழகின் மறைத்தூதுப் பணியாளராகின்றார், அதுவே வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான தாகத்தை உருவாக்குகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை.

நிராகரிக்கப்பட்ட, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட கலைஞரின் மாண்பை உயர்த்த உதவும் பணிதான் உங்கள் பணி என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அப்பணியுடன் ஒன்றித்துவிடுங்கள் என்றும் அவர்களை அறிவுறுத்திய திருத்தந்தை, இத்தகையச் சூழலில், வித்தியாசமான, அழகான உலகத்தை கனவு காணும் திறன் கொண்ட ஆண்களும் பெண்களும் நமக்குத் தேவைப்படுகின்றனர் என்றும், ஆகவே, மக்களை கனவு காணத் தூண்டுங்கள், அதன் விளைவாக அவர்கள் நிறைவான வாழ்வு வாழ்வதற்கு விருப்பம் கொள்வர் என்றும் நம்பிக்கையூட்டினார்.

மேலும், மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டியது  இன்று நமக்கு அவசரத் தேவையாக உள்ளது என்றும்,  பெரிய காலநிலை நெருக்கடிகள் நமது பழக்கவழக்கங்களையும் நடத்தைகளையும் மறுபரிசீலனை செய்ய நம்மை கட்டாயப்படுத்துகின்றன என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கலை என்பது இயற்கையின் அழகைப் பற்றிய செய்தியை தெரிவிக்க மிகவும் வலிமைவாய்ந்த ஊடகம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இணக்கமான உலகைக் கட்டியெழுப்புவதில் நமது பங்களிப்பு என்ன? என்ற கேள்வியை  நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்று உரைத்த திருத்தந்தை, கலாச்சாரத்தின் அழகு எப்போதும் நம்மை இயங்க வைக்கிறது என்றும், கடவுளின் அழகை எதிர்கொள்வது, மனித மற்றும் உடன்பிறந்த சகோதரச் சமூகங்களை நோக்கிய பாதையை மீண்டும் தொடங்க நம்மை அனுமதிக்கிறது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2024, 14:18