ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

நோயறிதல் பரிசோதனைகாக மருத்துவமனை சென்ற திருத்தந்தை!

புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானுக்கு மிக அருகில் இருக்கும் டைபர் தீவில் உள்ள உரோம் ஜெமெல்லி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார் : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த நாட்களில் லேசான காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட வேளை, பிப்ரவரி 28, இப்புதனன்று, தனது புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு, சில நோயறிதல் சோதனைகளுக்காக உரோம் ஜெமெல்லி மருத்துவமனைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பரிசோதனைகளுக்குப் பின்பு மீண்டும் தனது இல்லம் திரும்பினார் என்று திருபீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் திருத்தந்தை அனுபவிக்கும் காய்ச்சல் அறிகுறிகளின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில திட்டமிடப்பட்ட அவரின் சந்திப்புகள் கடந்த நாட்களில் இரத்து செய்யப்பட்டன என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28, இப்புதனன்று காலை, திருத்தந்தை புனித ஆறாம் பவுலரங்கத்தில் நிகழ்ந்த புதன் பொதுமறைக்கல்வி உரையின் தொடக்கத்தில், அங்கிருந்தவர்களிடம், தனக்கு இன்னும் சளி இருப்பதாகக் கூறியதுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேரருள்திரு Filippo Ciampanelli-யிடம் தனது மறைக்கல்வி உரையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திட்டமிட்டபடி மார்ச் 2-ஆம் தேதி சனிக்கிழமையன்று, ஜெர்மன் வேந்தர் Olaf Scholtz அவர்களைத் திருத்தந்தை சந்திப்பார் என்பதைத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 February 2024, 12:15