ҽ

அருள்சகோதரி Paesie அருள்சகோதரி Paesie 

ஹெய்டி குழந்தைகளுக்காகப் பணியாற்றும் அருள்சகோதரி Paësie

நாட்டில் நிலவும் வன்முறைச் சூழலினால் மக்கள் எந்த நேரமும் பாதிக்கப்படலாம் என்ற பயம் நிறைந்த சூழலில் வாழ்கின்றனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தையின் தொலைபேசி உரையாடல் தனக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்வையும் அளித்தது என்றும், குழந்தைகளுக்காக ஆற்றும் பணிக்காகவும், அவர்களோடு உடன் இருப்பதற்காகவும் தனக்கு நன்றிச் செய்தியை அவர் வழங்கினார் என்றும் கூறினார் அருள்சகோதரி Paësie.

பிப்ரவரி 3 சனிக்கிழமை மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து, வத்திக்கான் வானொலிக்கு அளித்த நேர்காணலில் இந்த தொலைபேசி உரையாடல் மற்றும் தனது பணி குறித்தும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி Paësie

ஹெய்டியின் தலைநகரான போர்த்தோ பிரின்ஸ் பகுதியில் உள்ள Cité Soleil என்னும் சேரிப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 2500 குழந்தைகளைப் பாதுகாத்து பராமரித்து வரும் அருள்சகோதரி Paësie அவர்கள் ஏழைக்குழந்தைகளுக்கு பணியாற்றிவரும் அருள்சகோதரி அவர்களிடம் திருத்தந்தை, குழந்தைகளின் நிலைமையை விசாரித்ததாகவும், அருள்சகோதரியின் அர்ப்பணிப்புள்ள பணிக்கு தனது உடனிருப்பை அளிப்பதாக எடுத்துரைத்ததாகவும் கூறினார்.

திருத்தந்தையின் குரலில் மென்மையையும் இரக்கத்தையும் கண்டுணர்ந்ததாக எடுத்துரைத்த சகோதரி அவர்கள், இந்த மகிழ்வை தனது குழுவினர் மற்றும் குழந்தைகள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதாகவும், ஏழைச் சிறாருக்கான திருத்தந்தையின் இந்த வேண்டுகோ ஹெய்டியில் உள்ள குழந்தைகள் மற்றும் எல்லா ஏழைகளுக்காகக் கொடுக்கப்பட்ட வேண்டுகோள் என்றும் கூறினார்.

1999 ஆம் ஆண்டு முதல் ஹெய்டியில் பணியாற்றி வரும் சகோதரி ஹெய்டியில் அன்றாட வாழ்க்கை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், நாட்டில் நிலவும் வன்முறைச் சூழலினால் மக்கள் எந்த நேரமும் பாதிக்கப்படலாம் என்ற பயம் நிறைந்த சூழலில் வாழ்கின்றனர் என்றும், பெருகிவரும் வன்முறையானது நாட்டில் வறுமையையும், ஏழ்மையையும் அதிகரிக்கச் செய்கின்றது என்றும் கூறினார்.   

கடந்த மாதம் ஹெய்டியில் ஆறு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டதை எடுத்துரைத்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றீர்களா என்ற கேள்விக்கு, போர்ட்-ஓ-பிரின்ஸில் நடக்கும் கடத்தல்கள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதிக்கிறது என்றும் பணத்திற்காக சில நபர்கள் குறிவைத்துக் கடத்தப்படுகின்றார்கள் என்றும், துறவறத்தாரில் சிலர் பணக்காரர்களாகவும் வெகுசிலர் ஏழைகள் பக்கம் இருக்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.

ஐநா புள்ளிவிவரங்களின்படி, வன்முறையால் 3,00,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதை எடுத்துரைத்து போர்ட்டோ பிரின்ஸில் இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் தங்கள் குழந்தைகளுடன் தெருக்களில் தங்குகின்றனர் என்றும், திருஅவையும் அதன் உதவிகளும் இல்லையெனில் இவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை இறைவன் மட்டுமே அறிவார் என்றும் கூறினார் அருள்சகோதரி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2024, 12:08