ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் உடன் Ahmed Al Tayeb (கோப்புப்படம் 2019) திருத்தந்தை பிரான்சிஸ் உடன் Ahmed Al Tayeb (கோப்புப்படம் 2019) 

விண்ணகத்தந்தையின் பிள்ளைகள் நாம் என்பதை எடுத்துரைக்கும் விருது

இவ்வுலகில் வாழும் எல்லா மக்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாக சகோதர சகோதரிகளாக இணைக்கப்பட்டுள்ளோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உரையாடல், நட்புணர்வு, நல்லிணக்கம், மாண்பு போன்றவற்றின் பயணத்தை ஊக்குவிப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு அபுதாபியில் தொடங்கப்பட்ட மனித உடன்பிறந்த நிலைக்கான சையத் விருது மிகுந்த பலனை அளிக்கின்றது என்றும், இவ்வுலகில் வாழும் எல்லா மக்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாக, சகோதர சகோதரிகளாக இணைக்கப்பட்டுள்ளோம் என்பதனை இவ்விருது எடுத்துரைக்கின்றது என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் (ABRAHAMIC FAMILY HOUSE) நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்தநிலைக்கான சையத் விருது வழங்கும் விழாவிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறைக் கைதிகளிடையே சேவையாற்றும் சிலே நாட்டின் அருள்சகோதரி Nelly León Correa, எகிப்து நாட்டு இதய அறுவை சிகிச்சை நிபுணர் Magdi Yacoub, மற்றும் இந்தோனேசியாவின் இரு இஸ்லாமிய அமைப்புக்களான Nahdlatul Ulama, Muhammadiyah ஆகியவைகளுக்கும் தனது வாழ்த்துக்களை எடுத்துரைத்துள்ளார்.

 

அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களில் இருந்து இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, மேம்படுத்தப்பட்ட விழுமியங்கள் நமது மனித குடும்பம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்பதற்கான மற்றொரு அறிகுறி என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், அதே நேரத்தில் சகோதரத்துவ ஒற்றுமையின்மை, சுற்றுச்சூழல் பேரழிவு, சமூக சீரழிவுகளினால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களினால் ஏராளமான சகோதர சகோதரிகள் உலகம் முழுவதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநீதி, வெறுப்பு, போர் போன்ற இருளின் மத்தியில் இவ்வாண்டு சையத் விருதுபெறுபவர்கள் தங்களது சிறப்பான பணிகள் மற்றும் விழுமியங்கள் வழியாக மனிதகுலத்தை உலகஒளிவீசச் செய்கின்றனர் என்றும்,   ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகள், சிறைக்கைதிகள் போன்றவர்களிடத்தில் அன்பு, சகிப்புத்தன்மை, அக்கறையை வெளிப்படுத்தி அவர்களின் மறுவாழ்விற்கான உழைத்து சமூகத்தில் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் பணியினைச் செய்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2024, 09:51