ҽ

அப்போஸ்தலிக்க ஆர்வம், துணிவின் மாதிரிகை தூய Mama Antula

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை, தூய லூர்து அன்னை திருவிழாவன்று ஏறக்குறைய 5500 விசுவாசிகள் கூடியிருக்க வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் அருளாளர் Maria Antonia de San José அவர்களின் புனிதர் பட்டமளிப்பு விழா திருப்பலி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மாம்மா அந்துலா (Mama Antula) என்றழைக்கப்படும் தூய மரிய அந்தோணியா டி சன் ஜோஸ், தூயஆவியின் ஆற்றல் பெற்றவராக, பாலைவனங்கள் மற்றும் ஆபத்தான பாதைகள் வழியாக நடந்துசென்று, கடவுளை எடுத்துரைத்தவர் என்றும்,  அப்போஸ்தலிக்க ஆர்வம் மற்றும் துணிவின் மாதிரியாகக் காட்சியளிப்பவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை, தூய லூர்து அன்னை திருவிழாவன்று ஏறக்குறைய 5500 விசுவாசிகள் கூடியிருக்க வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற அருளாளர் Maria Antonia de San José அவர்களின் புனிதர் பட்டமளிப்பு விழா திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

தூய யோசேப்பு மற்றும் தூய Gaetano Thiene மேல் அதிக பற்றும் பக்தியும் கொண்டவரான தூய Mama Antula அவர்கள், வீடுகள், தெருக்கள், சுற்றுப்புறங்கள், போக்குவரத்து, கடைகள் தொழிற்சாலைகள், மனித இதயங்கள், போன்றவற்றில் உழைப்பு, நேர்மை, ஏழைகளுக்கான அன்றாட உணவு போன்றவற்றின் வழியாக மனித மாண்பையும், வாழ்க்கையையும் வழங்கினார் என்றும், தெய்வீக பாதுகாப்பிற்காக பரிந்து பேசுபவராகத் திகழ்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருப்பலியின்போது திருத்தந்தை
திருப்பலியின்போது திருத்தந்தை

பொதுக்காலத்தின் ஆறாம் வார வாசகங்கள் பற்றி எடுத்துரைத்து தனது மறையுரையைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழுநோய் என்னும் உடல்அழிவை உள்ளடக்கிய ஒரு நோயைப் பற்றி இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன என்றும், தொழுநோய் மற்றும் ஓரங்கட்டப்படுதல் என்னும் இரண்டு தீமையிலிருந்து இயேசு இன்றைய நற்செய்தியின் வழியாக நம்மைக் குணப்படுத்த விரும்புகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நகரத்திற்கு வெளியே வாழ கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள், தங்களது நகரத்தாரால் உதவிகள் செய்யப்பட வேண்டியவர்கள் அதற்கு மாற்றாக, கைவிடப்பட்டவர்களாகவும், பிரிவினையினால் நிராகரிக்கப்பட்டவர்களாகவும் வாழ்கின்றனர், ஏனென்றால் தொழு நோயாளரைப்போல நாமும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுவோம் என்ற பயத்தால் பிறரால் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருப்பலியில் நற்கருணை வழிபாட்டின்போது
திருப்பலியில் நற்கருணை வழிபாட்டின்போது

தொழுநோயாளர்கள் தாங்கள் செய்த பாவத்தின் காரணமாக கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள், எனவே அவர்களை விட்டுத் தொலைவில் இருப்போம் அவரைத் தொடுவது தீட்டு என்ற பொதுவான கருத்தினால் ஆள்கொள்ளப்பட்டு மக்கள் அவர்களை விலக்கி வைத்துள்ளனர் என்றும், இத்தகைய எண்ணம் தடைகளை உயர்த்துகின்றது, இரக்கத்தை பாதிப்படையச் செய்கின்றது, பலவீனமான பக்தியை உருவாக்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

பயம், முன்தீர்மானம், தவறான சமயப்பற்று என்னும் மூன்று காரணங்கள் ஆன்மாவின் தொழு நோய் உருவாகக் காரணமாகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவைகள் ஒரு மனிதனை பலவீனமானவனாக உணர வைக்கின்றன, வீணான ஒன்றாகக் கருத வைக்கின்றன என்று கூறி இயேசு தொழுநோயாளரை குணமாக்கியபோது தொட்டு, குணப்படுத்தினார் என்னும் இரண்டு செயல்களை முன்னிலைப்படுத்தினார்.

திருஅவையின் புதிய புனிதர் மாம்மா அந்துலா திருஉருவப்படம் முன் திருத்தந்தை
திருஅவையின் புதிய புனிதர் மாம்மா அந்துலா திருஉருவப்படம் முன் திருத்தந்தை

1.தொழுநோயாளரைத் தொட்ட இயேசு

தன்னை நோக்கிக் குரலெழுப்பிய தொழுநோயாளர் மேல் இரக்கம் கொண்ட இயேசு, நின்று, தனது கையை அவரை நோக்கி நீட்டி, அவரைத் தொட்டார், அவரைத் தொட்டால் தானும் அவரைப்போல மக்களால், சமுகத்தால் விலக்கி வைக்கப்படுவோம் என்பதை அறிந்து தொட்டார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தொழுநோயாளரைத் தொடாமல் தொலைவிலிருந்தே இயேசுவால் அவருக்கு குணமளித்திருக்க முடியும், ஆனால் அவரின் வழி அன்பு வழி, துன்புறுபவர்களின் அருகில் இருந்து, அவர்களின் காயங்களைத் தொட்டுக் குணப்படுத்தும் வழி என்றும், கடவுள் நம் அருகில் இருக்கின்றார், இயேசு நம் அருகில் எப்போதும் இருக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

கடவுள் நம்மை விட்டு தொலைவில் விண்ணகத்தில் இல்லை மாறாக இயேசு மனிதராக உருவெடுத்து, நம் அருகில் வந்து, நம் காயங்களை, ஏழ்மையைத் தொடுகின்றார் என்றும், நமது மனிதத்தை தொடுவதற்காக, தொழுநோயாளர் போல, நகரத்திற்கு வெளியே கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் கூறினார்.

இயேசுவை அன்பு செய்து பின்பற்றும் நாம், அவருடைய "தொடுதலை" நம்முடையதாக்குவதற்கு "அருகில் வருவதற்கும்”, “தன்னைக் கொடுப்பதற்கும்” எதிரான உள்ளுணர்வுகள் இதயத்தில் தோன்றும் போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மற்றவர்களிடமிருந்து விலகி நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்போதும், நமது நன்மைக்காக உலகத்தை குறைவாக எண்ணும்போதும், பிறரால் வரும் பிரச்சனைகள் எப்போதும் உள்ளன என்று நம்பும்போதும், நாம் கவனமாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஆன்மாவின் தொழுநோய்

ஆன்மாவின் தொழுநோயானது நமது அன்பையும் இரக்கத்தையும் உணர்வற்றதாக்கி, சுயநலம், முன்தீர்மானம், அலட்சியம், சகிப்புத்தன்மையின்மை, போன்றவற்றின் தாக்கத்தினால் நம்மை அழித்துவிடுகின்றது என்றும், தொழுநோயின் ஆரம்பமான தோலில் தொடங்கும் சிறு வெண்புள்ளிகள் போல நமது ஆன்மாவில் ஏற்படும் இத்தகைய தொழுநோயினை தொடக்கத்திலேயேக் கண்டறிந்து தடுக்க முயலவேண்டும் என்றும் கூறினார்.

தூய பேதுரு பெருங்கோவிலில் மக்கள்
தூய பேதுரு பெருங்கோவிலில் மக்கள்

2.தொழுநோயாளியைக் குணப்படுத்திய இயேசு  

இரக்கமும் மென்மையும் கொண்ட கடவுள், எப்போதும் நம் அருகில் இருக்கின்றார் என்பதனை அடையாளப்படுத்தும் விதமாக, இயேசு தொழுநோயாளியைக் குணப்படுத்துகின்றார், நாமும் இயேசுவால் தொடப்பட குணப்படுத்தப்பட நம்மையே அனுமதிப்போம், செபம், திருநற்கருணை ஆராதனை, இறைவார்த்தை, திருவருளடையாளங்கள், போன்றவற்றின் வழியாக இயேசு நம்மைத் தொட அனுமதிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவுடனான தொடர்பு நம்மை மாற்றுகின்றது, நம் பாவங்களிலிருந்து நம்மைக் குணப்படுத்துகின்றது, நமது மூடப்பட்ட மனநிலை மற்றும் இறுக்கங்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றது, நமது ஆன்மா மற்றும் இதயத்தின் காயங்கள் அனைத்தும் இயேசுவிடம் கொண்டுவரப்பட வேண்டும், உண்மையான, நேர்மையான, உயிருள்ள செபமாக, நமது துன்பங்கள், பலவீனங்கள், தவறுகள், பயங்கள் அனைத்தும் அவர் பாதத்தின் முன் வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இயேசு எனது ஆன்மாவின் தொழுநோயைத் தொட்டு, குணப்படுத்த நான் அனுமதிக்கின்றேனா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், அவரது தொடுதலினால் நாம் சிறந்தவர்களாக மீண்டும் பிறக்கின்றோம், நமது இதயம், ஆன்மா மீண்டும் புதுப்பிறப்படைகின்றது, கடந்த கால தவறுகளின் காயங்கள் குணமாகின்றன, உறவுகள் என்னும் தோல்கள் புதிதாக, ஆரோக்கியமானதாக, இயற்கையாக, அழகானதாக, உருவாகின்றது என்றும் எடுத்துரைத்தார்.

கடவுள்  நம்மை அன்பு செய்கின்றார், நம்மை அவர் தொட நாம் அனுமதித்தால், நாமும் அவருடைய தூயஆவியின் பலத்தால் மீட்பளிக்கும் அன்பின் சாட்சிகளாக மாற முடியும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2024, 13:03