ҽ

உலக ஆயர்கள் மாமன்றத்தின்போது திருஅவையில் பெண்களின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடும் உறுப்பினர்கள் உலக ஆயர்கள் மாமன்றத்தின்போது திருஅவையில் பெண்களின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடும் உறுப்பினர்கள்   (ANSA)

பெண்களிடமிருந்து திருஅவை இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்!

உண்மையில் பெண்கள் சொல்வதைக் கேட்பதன் வழியாக, எதார்த்தத்தை வேறு கோணத்தில் பார்க்கும் ஒருவரின் பேச்சைக் கேட்கிறோம். அதனால் நமது திட்டங்களையும் முன்னுரிமைகளையும் மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கிறோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறைவேண்டல், ஆன்மிகச் சிந்தனைகள் மற்றும் செயலின் வழியாகத் திருஅவைசார் குழுமங்களின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்குப் பெண்களின் இருப்பு மற்றும் பங்களிப்பு திருஅவையை எப்போதும் வளப்படுத்திய உண்மைகளாகும் என்றும், உண்மையில் இவை அதன் அடையாளத்தை உருவாக்குகின்றன என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹான்ஸ் உர்ஸ் வான் பல்தாசரின் 'கொள்கைகள்' பற்றிய விமர்சன மதிப்பீட்டுடன் வெளிவந்திருக்கும் Making the Church Less Masculine? என்ற நூலிற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, ஆயினும்கூட, குறிப்பாக உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்பு மற்றும் கொண்டாட்டத்தின் போது, ​​திருஅவையில் பெண்களின் குரலுக்கு நாம் போதுமான அளவு செவிசாய்க்கவில்லை என்பதையும், அவர்களிடமிருந்து திருஅவை இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தோம் என்றும் கூறியுள்ளார்

உண்மையில் பெண்கள் சொல்வதைக் கேட்பதன் வழியாக, எதார்த்தத்தை வேறு கோணத்தில் பார்க்கும் ஒருவரின் பேச்சைக் கேட்கிறோம் என்றும், அதனால் நமது  திட்டங்களையும் முன்னுரிமைகளையும் மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கிறோம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

மேலும் சில வேளைகளில் நாம் கேட்பது மிகவும் புதியது மற்றும் நமது சிந்தனை முறையிலிருந்து வேறுபட்டது மற்றும் பார்ப்பது அபத்தமானது என்று தோன்றுகிறது, மேலும் இதுகுறித்து நாம் அச்சமடைகின்றோம், என்றாலும் இந்தத் திகைப்பு  நலமானதுதான் என்றும் அது நம்மை வளரச் செய்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஒருவருக்கொருவர் உண்மையிலேயே கற்றுக்கொள்வதற்கும், வேறுபாடுகள் நிறைந்த ஆனால் ஒன்றித்துப் பயணிப்பதற்கும் ஒரே கடவுளின் மக்களாக முன்னேறுவதற்கும் பொறுமை, ஒருவருக்கொருவர்மீது மரியாதை, செவிசாய்த்தல் மற்றும் திறந்த மனப்பான்மை ஆகியவை தேவைப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2024, 14:48