ҽ

Mama Antulaவின் படத்துடன் திருத்தந்தை Mama Antulaவின் படத்துடன் திருத்தந்தை  (ANSA)

அருளாளர் Mama Antulaவுக்கு புனிதர்பட்ட நிகழ்வு

ஏழைகளுக்காக அர்ப்பணத்துடன் பிறரன்புப் பணிகளை ஆற்றிய அருளாளர் Mama Antulaவின் சேவைகள் இன்றைய காலக்கட்டத்தில் அதிகம் அதிகமாகத் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அருளாளர் Maria Antonia de San José அவர்களின் புனிதர் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு உரோம் நகர் வந்துள்ள ஏறக்குறைய 300 அர்ஜெண்டீனா நாட்டுத் திருப்பயணிகளை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதிய புனிதரின் பிறரன்பு நடவடிக்கைகள் மற்றும், எத்தகையச் சூழலிலும் விசுவாசத்தை இழக்காதிருத்தல் என்பவை குறித்து எடுத்துரைத்தார்.

Mama Antula என அர்ஜெண்டினா மக்களால் செல்லமாக அழைக்கப்படும் புனித யோசேப்பின் மரிய அந்தோனியா என்ற அருளாளர், வரும் ஞாயிறு, பிப்ரவரி 11ஆம் தேதி லூர்து அன்னை திருவிழாவின்போது புனிதையாக வத்திக்கானில் அறிவிக்கப்படும் விழாவில் பங்குகொள்ள தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வத்திக்கானில் வெள்ளிக்கிழமை காலை சந்தித்தபோது உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழைகளுக்காக அர்ப்பணத்துடன் பிறரன்புப் பணிகளை ஆற்றிய Mama Antulaவின் சேவைகள் இன்றைய காலக்கட்டத்தில் அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்ற  திருத்தந்தை, கையில் ஒரு சிலுவையுடனும் காலில் மிதியடியின்றியும் தலைநகர் புனோஸ் ஐரஸ்க்கு வந்தவர், இறைவனில் கொண்டிருந்த நம்பிக்கையின் துணைகொண்டு தன் சேவைகளைத் துவக்கினார் என்றார்.

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிக முறைகளைப் பின்பற்றி ஓர் ஆன்மிக இயக்கத்தை ஆரம்பித்த இந்த அருளாளர், இயேசு சபை தடைச் செய்யப்பட்ட காலத்தில் மறைந்திருந்து சேவைகளை ஆற்றிவந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

எத்தகைய எதிர்ப்புகள் வந்தபோதிலும் இறைவனில் முழு நம்பிக்கைக் கொண்டவராக Mama Antula தன் பணிகளைத் தொடர்ந்து செயலாற்றியது நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது என்பதையும் மேற்கோள் காட்டினார் திருத்தந்தை.

புனித யோசேப்பு மீது தனிப்பட்ட விதத்தில் பக்தி கொண்டிருந்த Mama Antula அவர்கள், திருநற்கருணை மீது அளவற்ற ஆர்வம் கொண்டவராக இருந்ததையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பணிகளை ஆற்றுவதற்கான சக்தியை நாம் திருநற்கருணையிலிருந்து பெறமுடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.

1730ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் பிறந்து, ஆன்மீக இயக்கம் ஒன்றை துவக்கி பிறரன்புச் சேவைகளில் முழு ஈடுபாட்டுடன் உழைத்த Mama Antula அவர்கள், 1799ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அந்நாட்டுத் தலைநகரில் காலமானார்.

அருளாளர் Mama Antula அவர்களை வரும் ஞாயிற்றுக்கிழமை காலை புனிதராக அறிவிக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2024, 13:56