பிறருடனான உரையாடலில் நம்மை வளர்க்கும் அறிவு
மெரினா ராஜ் - வத்திக்கான்
அறியாமை பயத்தை வளர்க்கின்றது, பயம் சகிப்புத்தன்மையின்மையை வளர்க்கின்றது என்றும், எப்போதும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் சிறந்ததை வழங்க அனுமதிக்கவும் உதவுகின்ற அறிவு, பிறருடனான உரையாடலில் நம்மை வளர்க்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 3 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலியின் வரேசே பகுதியில் உள்ள Collegio Rotondi (gorla minore) பள்ளி பொறுப்பாளர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏறக்குறைய 3000 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்து கற்றல் என்பது முதிர்ச்சியடைதலையும், வளர்ச்சியடைதலையும் வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் என்று நமக்குக் கற்பித்த இயேசு, உண்மையின் வழியில் ஒன்றிணைந்து நடக்க நம்மை அழைக்கின்றார் என்றும், ஒன்றிணைந்து மகிழ்வுடன் கற்கும்போது வளர்ச்சியடைகின்றோம் முதிர்ச்சியடைகின்றோம். நண்பர்கள், ஆசிரியர்கள், கல்வி கற்க உதவுபவர்கள் என அனைவரோடும் நல்ல உரையாடலை நாம் ஏற்படுத்துகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
புதிய விடயங்களுக்கு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முக்கியமற்றவைகளான சமூகவலைதளங்களில் பெறும் விருப்பம், (like, comment, followers) செய்தி, பின்தொடர்பவர்கள் போன்றவற்றின் கருத்துக்களால் தாக்கப்படாமல், கவனமாக இருக்கவேண்டும், இல்லையென்றால் இவற்றால் நமது சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.
அதேவேளையில் அவசியமில்லாதவைகள், வேறுபட்ட கருத்துகள், சிந்தனை முறைகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவும், மாற்றிக்கொள்ளவும் பயப்பட வேண்டாம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எப்போதும் கேட்கவும் விவாதிக்கவும் கூடிய வகையில் உண்மையை நேசிக்கக் கூடியவர்களாக இருங்கள் என்றும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்