ҽ

2023ஆம் ஆண்டு இறைவார்த்தை ஞாயிறின்போது 2023ஆம் ஆண்டு இறைவார்த்தை ஞாயிறின்போது  (ANSA)

இறைவார்த்தை ஞாயிறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரமும் விடும் அழைப்பு

கிறிஸ்தவ ஒன்றிப்பு வார தலைப்பு - ‘உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒன்றிணைந்து வளர்வதற்கு இறைவார்த்தை நமக்கு அழைப்புவிடுக்கிறது என, இம்மாதம் 21ஆம் தேதி சிறப்பிக்கப்படும் இறைவார்த்தை ஞாயிறுக்கும், 18ஆம் தேதி முதல் 25 வரை கொண்டாடப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கும் தயாரிப்பாக டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் நம்மை பிறருக்கு மூடாதிருக்கவும், நம்மால் எதையும் தனியாகச் செய்துவிடமுடியும் என எண்ணாதிருக்கவும், அதேவேளை ஒன்றிணைந்து வளரவும் இறைவார்த்தை நமக்கு அழைப்புவிடுக்கிறது, என ஜனவரி 16, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒருவருக்கொருவர் செவிமடுப்போம், கலந்துரையாடுவோம், மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம் என மேலும் அதில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற ஹேஷ்டாக்குடன் வெளியிடப்பட்டுள்ள இந்த டுவிட்டர் செய்தி, ஜனவரி 21ன் இறைவார்த்தை ஞாயிறு கொண்டாட்டத்திற்கும், இவ்வாரம் வியாழன் முதல் வரும் வாரம் வியாழன் வரை திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கும் நாம் நம்மை தயாரிக்கவேண்டும் என அழைப்புவிடுக்கிறது.

ஜனவரி 21ஆம் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்படும் இறைவார்த்தை ஞாயிறை ஒட்டி வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, அவ்வாரத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி, புனித பவுல் மனம் திரும்பிய நாளான ஜனவரி 25ஆம் தேதி, அதாவது ஒன்றிப்பு வாரத்தின் இறுதி நாள் மாலையில் உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவிலில் பிற கிறிஸ்தவ சபையினருடன் இணைந்து செபவழிபாட்டில் கலந்துகொள்வார்.

இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கென, ‘உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’, என்ற விவிலிய வார்த்தைகள் தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2024, 15:14