ҽ

மனித வாழ்வின் மாண்பு காக்கப்படவேண்டும் மனித வாழ்வின் மாண்பு காக்கப்படவேண்டும் 

மனித மாண்பு மதிக்கப்படுவது, அமைதிக்கு முன் நிபந்தனை

மனித வாழ்வு மதிக்கப்படுவதையும், தாயின் வயிற்றில் உருவாகும் கரு அழிக்கப்படாதிருப்பதையும், வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படாமலிருப்பதையும் அமைதி எதிர்பார்க்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வொரு மனித வாழ்வும் மதிக்கப்படவேண்டும் என்பதை அமைதி எதிர்பார்க்கிறது என ஜனவரி 12, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித மாண்பு மதிக்கப்படுவதற்கும் அமைதிக்கும் இடையேயான தொடர்பு குறித்து தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய் வயிற்றில் வளரும் குழந்தை அந்நேரம் முதல் மதிக்கப்படுவதிலிருந்து, மனித வாழ்வு முழுவதும் மதிக்கப்படுவதை அமைதி எதிர்பார்க்கின்றது, அதேவேளை, தாயின் வயிற்றில் உருவாகும் கரு, அழிக்கப்படாதிருப்பதையும் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படாமலிருப்பதையும் அமைதி எதிர்பார்க்கிறது என கூறியுள்ளதுடன், வாடகைத்தாய்முறை என்பது பெண் மற்றும் குழந்தையின் மாண்பை பெரிய அளவில் மீறுவதாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

வாடகைத்தாய்முறை, இந்தியா உட்பட பல நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டு ஜனவரி 25 முதல் அமலுக்கு வந்த வாடகைத்தாய் குறித்த நெறிமுறைச் சட்ட விதிகளின்படி, ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒருமுறைதான் வாடகைத் தாயாக இருக்க முடியும், வாடகைத்தாயாக உள்ள பெண்ணின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும், தம்பதி இந்தியராகவும், திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், தம்பதிக்கு ஏற்கெனவே குழந்தை இருக்கக் கூடாது, திருமணமாகாமல் சேர்ந்து வசிப்பவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர், தன்பாலின உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், ஏற்கெனவே குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் ஆகியோர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை என்பவை உட்பட, தம்பதியரின் வயது குறித்தும் கட்டுப்பாடு உள்ள நிலையில், வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2024, 15:55