ҽ

செபத்தின் வல்லமை மற்றும் தேவையை வலியுறுத்தும் செப ஆண்டு

தனிப்பட்ட வாழ்க்கை திருஅவை மற்றும் உலக வாழ்வில் செபத்தின் தேவை மற்றும் வல்லமையை உணர கொடுக்கப்பட்ட இந்த செப ஆண்டில் நமக்கு உதவ நற்செய்தி அறிவிப்புப் பேராயம் முன்னிலையில் இருந்து செயல்படும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைஅருளின் நிகழ்வான யூபிலி ஆண்டில் கடவுள் நம்பிக்கையின் ஆற்றலை அதிகப்படுத்த சிறப்பாக செபிப்போம் என்றும், செபத்தின் மதிப்பு, தேவை மற்றும் வல்லமையை இந்த யூபிலி ஆண்டில் நாம் கண்டறிவதற்காக இன்று முதல் செப ஆண்டானது ஆரம்பமாகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 21 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனிப்பட்ட வாழ்க்கை திருஅவை மற்றும் உலக வாழ்வில் செபத்தின் தேவை மற்றும் வல்லமையை உணர கொடுக்கப்பட்ட இந்த செப ஆண்டில் நமக்கு உதவ நற்செய்தி அறிவிப்புப் பேராயம் முன்னிலையில் இருந்து செயல்படும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இந்நாள்களில் நாம் குறிப்பாக கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக செபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உக்ரைன், இஸ்ரயேரல், பாலஸ்தீனம் மற்றும் உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களின் அமைதிக்காக இறைவனை நோக்கி செபிப்பதில் நாம் சோர்வடைய வேண்டாம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பற்றாக்குறையால் பாதிக்கப்படும் பலவீனமானவர்கள், காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சிறார், உணர்வுகள், கனவுகள், மற்றும் எதிர்காலத்தை இழந்தவர்கள்  என அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அமைதி கிடைக்கப்பெற செபிக்க வேண்டியது நமது பொறுப்பு என்றும் கூறினார்.

மேலும் ஹைட்டியில், கடத்தப்பட்ட ஆறு அருள்சகோதரிகள் மற்றும் மக்களை நினைவுகூர்ந்து எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அன்பான மக்கள் மீது துன்பத்தை ஏற்படுத்தும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,  கடத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2024, 13:54