ҽ

மூவேளை செப உரை - இயேசுவை சந்திக்க முயல்வோம்

இயேசுவைத்தேடுதல், அவரோடு தங்குதல், அவரைப் பற்றி அறிவித்தல் ஆகிய மூன்று செயல்களில் கவனம் செலுத்த வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் எப்போது இயேசுவை முதன்முதலில் சந்தித்தோம் என்பதை நினைவுகூர்ந்து அவரைப் பின்தொடர்வதன் மகிழ்ச்சியை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்றும், இயேசுவைத்தேடுதல், அவரோடு தங்குதல், அவரைப் பற்றி அறிவித்தல் ஆகிய மூன்று செயல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 14 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தம்மைப் பின்தொடர்பவர்கள் இறைவார்த்தைக்கு செவிமடுக்கின்றவர்களாக, வாழ்வின் சவால்களை சமாளிக்கின்றவர்களாக இருக்க விரும்புகின்றார் என்றும் கூறினார்.

இயேசுவைத் தேடுபவர்களாக இருங்கள்

யோவானின் சீடர்கள் இயேவைப் பின்தொடர்ந்தபோது, அவர்களிடம் இயேசு கேட்ட முதல் வார்த்தை என்ன தேடுகின்றீர்கள் என்பது தான் என்று கூறிய திருத்தந்தை, இக்கேள்வியின் வழியாக இயேசு, அச்சீடர்கள் தங்கள் இதயத்தில் வைத்திருக்கும் உணர்வுகள் என்ன என்பதைக் காண விழைகின்றார் என்றும் கூறினார்.

இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கு அவரை முதலில் நாம் தேட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், தன்னைப் பின்பற்றுபவர்கள் மேலோட்டமாக அல்ல மாறாக முழுமனதுடன் தன்னைத்தேடி பின்பற்ற வேண்டும் என்றும், திறந்த இதயம் கொண்டவர்களையே இறைவன் தன்னைப் பின் தொடர அழைக்கின்றார், மூடியதும், தன்னில் நிறைவுகண்டதுமான இதயத்தை அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

இயேசுவோடு தங்குபவர்களாக இருங்கள்

இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்கள் இருவரும் அவரைப் பற்றிய நற்செய்தி, அற்புதம், அடையாளம், தகவல் என எதையும் தேடவில்லை, மாறாக அவரோடு தங்க, சந்திக்க, செவிசாய்க்க உரையாட விரும்பினர் என்றும்,  ரபி நீர் எங்கே தங்கி இருக்கின்றீர் என்பதே அவர்களின் முதல் கேள்வியாக இருந்தது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு அவர்களிடம், வந்து பாருங்கள் என்று பதில்மொழி கூறியதை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சீடர்கள் இயேசுவோடு தங்கவும், உடனிருக்கவும் அழைக்கப்பட்டனர் என்றும் இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கான மிக முக்கிய அடிப்படைக் காரணம் இதுவே என்றும் கூறினார்.

நம்பிக்கை என்பது ஒரு கோட்பாடல்ல, மாறாக அது இறைவனுடனான ஒரு சந்திப்பு. அவர் எங்கு வாழ்கின்றார் என்பதை அறிந்து, அவரோடு தங்குதல் என்றும், இறைவனைச் சந்திப்பதும் அவரோடு இருப்பதும் வாழ்வின் மிக முக்கியமான ஒன்று என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.   

இயேசுவை அறிவிப்பவர்களாக இருங்கள்

இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்கள் அவர் எங்கு இருக்கின்றார் என்பதை அறிந்து அவரோடு தங்கினர் என்றும், அதன்பின் அவர்கள் இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இயேசுவைத் தேடுகின்றோமா? அவருடன் தங்குகின்றோமா? அவரைப்பற்றிப் பிறருக்கு அறிவிக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்பு விடுத்தார்.

ஏறக்குறைய மாலை நான்கு மணி என்று நற்செய்தியில் குறிப்பிடுவதால் சீடர்கள் மிகத்துல்லியமாக இயேசுவை சந்தித்த நேரத்தை நினைவில் வைத்திருந்தனர் என்றும், அவர்களது வாழ்க்கையையே மாற்றிய இயேசுவுடனான அந்த சந்திப்பின் நிகழ்வானது மிக வலுவான நிகழ்வாக அவர்களுக்கு அமைந்தது என்றும் கூறினார்.

தாங்கள் பெற்ற அனுபவத்தை அவர்கள் தங்களது சகோதர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தங்களது சகோதர்களும் இறைவனை, மெசியாவை சந்திக்க உதவுகின்றார்கள் என்றும், இயேசுவோடு தங்கி இருங்கள் அவரைப் பற்றி அறிவியுங்கள் என்றும் கூறினார் . 

நான் எப்போது இறைவனை சந்தித்தேன்? இறைவன் என் இதயத்தைத் தொட்டது எப்போது? என்று நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நாம் இறைவனின் அன்பில் சீடர்களாக இருக்கிறோமா, இறைவனைத் தேடுகிறோமா? செபத்தில் அவருடன் நிலைத்திருக்கிறோமா? இறைவனுடனான சந்திப்பின் இந்த அழகை அறிவிக்க, பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2024, 13:29