ҽ

இறைவேண்டலில் திருத்தந்தை இறைவேண்டலில் திருத்தந்தை  (AFP or licensors)

இறைவேண்டுதல் என்பது விசுவாசத்தின் உயிர்மூச்சு

இறைவனை நம்பி தன்னை அவரிடம் ஒப்படைக்கும் இதயத்திலிருந்து வெளிப்படும் செபமெனும் மௌனக் கூக்குரலை விவரிக்க வார்த்தைகள் இல்லை, ஏனெனில் இது ஒரு மறைஇரகசியம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இறைவேண்டுதல் என்பது விசுவாசத்தின் உயிர்மூச்சு, மற்றும் அதன் சரியான வெளிப்பாடு என, இறைவேண்டல் குறித்து கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரி அவர்கள் எழுதியுள்ள நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரவிருக்கும் ஜூபிலி ஆண்டிற்கு தயாரிப்பாக செப ஆண்டை திருத்தந்தை  அறிவித்துள்ளதையொட்டி இவ்வாண்டில் செபத்தில் உதவுவதற்கென ஜெபக்கருத்துக்களுடன், ‘இன்று செபித்தல், வெற்றிக்கான சவால்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை கர்தினால் கொமாஸ்திரி அவர்கள் வெளியிட, அதற்கு முகவுரை ஒன்றை எழுதியுள்ள திருத்தந்தை,  இறைவனை நம்பி தன்னை அவரிடம் ஒப்படைக்கும் இதயத்திலிருந்து வெளிப்படும் இந்த மௌனக் கூக்குரலை விவரிக்க வார்த்தைகள் இல்லை, ஏனெனில் இது ஒரு மறைஇரகசியம் என எடுத்துரைத்துள்ளார்.

இறைவேண்டல் குறித்து எத்தனையோ விளக்கங்களை புனிதர்கள் வழியாகவும் இறையியலாளர்கள் வழியாகவும் நாம் பெற்றிருந்தாலும்,  இதனை வாழ்ந்து அனுபவிப்பதன் எளிமை வழியாகத்தான் அவரவர் புரிந்துகொள்ளமுடியும் என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வார்த்தைகளை வீணாக்காமல், அதேவேளை, மௌனமாக இறைவனிடம் இணைந்து, அவரிடம் நம்மை ஒப்படைத்து அவர் மேல் முழுநம்பிக்கை வைக்க வேண்டும் என செபம் குறித்து இயேசு உரைத்திருப்பதைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

இவ்வாண்டு முழுவதும் இறைவேண்டலுக்கு என அர்ப்பணிக்கப்பட்டிருப்பதை நினைவூட்டியுள்ளார்.

அண்மைகால பெரும் தொற்றுநோயாலும், போர்களாலும் உருவாகியுள்ள சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் மரணத்தையும், அழிவையும், ஏழ்மையையும், பாராமுகம் என்னும் கலாச்சாரத்தையும்,  விதைத்துவரும் வேளையில்,  அமைதி மற்றும் ஒருமைப்பாட்டிற்கான ஏக்கங்களை மூச்சுத் திணற வைக்கின்றன என அந்நூலின் முகவுரையில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, இத்தகைய சூழல்களில் நம் தந்தையாம் இறைவனை நோக்கி செப வேண்டுதலை எழுப்பவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தனிப்பட்ட முறையிலும், சமூகமாகவும், இறைவேண்டலின் மகிழ்வைக் கண்டுகொள்ளவும், தூயஆவியாரிடம் இருந்து வழிந்தோடும் ஜெபத்திற்கு தாழ்ச்சியுடன் நம் மனதில் இடமளிக்கவும் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகிலுள்ள அனைத்து திருத்தலங்களும் ஆறுதலின் இதயங்களாக மாறி, செபத்திற்கான நல்தூண்டுதல்களை திருப்பயணிகளிடம் வழங்கவேண்டும் என்ற விண்ணப்பதையும் அம்முகவுரையில் முன்வைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2024, 14:52