பெரிய செலவுகளுக்கு திருப்பீட பொருளாதாரத் துறையின் அனுமதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த விதிகளில் சில மாற்றங்களைக் கொணர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் சுயவிருப்பத்தின் பேரில் என்ற பொருள்படும் Motu Proprioக்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அதில் முதல் திருத்தத்தில், பெரிய தொகைகளில் செலவுச் செய்வதற்கு பொருளாதாரத்திற்கான திருப்பீடத் துறையின் இசைவு பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
திருப்பீடத்துறைகளின் பெரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், பொருட்களை வாங்குதல் அல்லது பணிகளை நிறைவேற்றுவதில் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கவும் இந்த இரு சட்ட திருத்தங்களும் உதவ உள்ளன.
ஒரு திருப்பீடத்துறையின் ஓராண்டு செலவீனத்தில், அதாவது கடந்த மூன்றாண்டுகளுக்கான வரவு செலவு இறுதி பட்டியலின் செலவு விகிதத்தில் 2 விழுக்காட்டிற்கு மேல் ஆகும் எந்த ஒரு தனிச் செலவுக்கும் திருப்பீடத்தின் பொருளாதார அவையின் அனுமதி தேவை எனவும், இந்த செலவு 150,000 யூரோக்களுக்கு குறைவாக இருந்தால் அனுமதி தேவையில்லை எனவும் தெரிவிக்கிறது இப்புதிய விதிமுறை.
பெரும் செலவுக்கு அனுமதியைக் கோரும் கடிதம் 30 நாட்களுக்குள் பதிலளிக்கப்படாமல் இருந்தால், அது அனுமதியளிக்கப்பட்டதற்கு சமம் எனக்கூறும் புதிய விதி, சில அசாதாரண சூழல்கலில் கூட, பதிலளிப்பதற்கு நாற்பது நாட்களைத் தாண்டக்கூடாது என தெரிவிக்கிறது.
தன் இரண்டாவது Motu Proprioவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருட்களை மற்றும் பணிகளைப் பெறுவது குறித்த ஒப்பந்தந்தம் பற்றி நான்கு விதிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு துறையும் தனக்குரிய நிதியின் நிலையான பயன்பாட்டை கவனத்தில் கொள்ளுதல், ஒருவரிடம் மெற்கொள்ளும் ஒப்பந்தத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டிருத்தல், ஒப்பந்தங்களை பெற விரும்புவோரை பாகுபாடின்றி நடத்துதல், சட்டவிரோதமற்ற மற்றும் ஊழலற்ற நடவடிக்கைகளை ஒப்பந்தக்காரர்களிடையே ஊக்குவித்தல் போன்ற நான்கு முக்கிய கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 16ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை முதல் இந்த புதிய திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்