ҽ

கள்ளம்கபடமற்ற மனம், திறந்த இதயம் கொண்டவர்கள் குழந்தைகள்

கடவுளின் அழகான மற்றும் நம்பிக்கையின் பரிசான திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெற காத்திருக்கும் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகானவை

மெரினா ராஜ் - வத்திக்கான்

கள்ளம் கபடமற்ற மனம் மற்றும் திறந்த இதயத்துடன், சான்றுள்ள வாழ்க்கை வாழ குழந்தைகள் உதவுகின்றார்கள் என்றும் திருமுழுக்கு அருளடையாளத்தின் முக்கியமானவர்களான இக்குழந்தைகள் நம்பிக்கையுடன் வாழ நமக்கு உதவுகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 7 ஞாயிற்றுக்கிழமை நமதாண்டவரின் திருமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் நடைபெற்ற திருமுழுக்கு அருளடையாளத் திருப்பலியின் தொடக்கத்தின் போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் அழகான மற்றும் நம்பிக்கையின் பரிசான திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெற காத்திருக்கும் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகானவை என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்றைய நாளின் முக்கியமான கதாநாயகர்கள் குழந்தைகள் என்றும் கூறினார்.

திருமுழுக்கு அருளடையாளத்தின்போது வழங்கப்படும் மெழுகுதிரியானது நமது துன்ப நேரங்களில் நம் இதயத்தை ஒளிரச்செய்ய உதவட்டும் என்றும் அதனைப் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திரிகள் நமது கிறிஸ்தவ விழுமியத்தின் வேர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன என்றும் இதயத்தின் ஒளிச்சுடரை ஒருபோதும் அணைக்காதீர்கள் என்றும் கூறினார்.

 திருமுழுக்கு அருளடையாளம் பெற வந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஞானப்பெற்றோர் அக்குழந்தைகளை ஞானத்திலும் அறிவிலும் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் வளர்க்க வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் அப்பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2024, 13:22