ҽ

ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடனும் கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடனுமான கலாச்சார ஒத்துழைப்பிற்கான கத்தோலிக்க அவையினருடன் திருத்தந்தை ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடனும் கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடனுமான கலாச்சார ஒத்துழைப்பிற்கான கத்தோலிக்க அவையினருடன் திருத்தந்தை  (Vatican Media)

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை மற்றும் கத்தோலிக்க மாணவர் பகிர்வு

கிறிஸ்தவ சபைகளுக்கிடையே இருக்கும் சுவர்களையும் முன்சார்பு எண்னங்களையும் தகர்க்கவும், பேச்சுவார்த்தைகளும் நட்புறவும்கூடிய பாலங்களைக் கட்டியெழுப்பவும் உதவுதல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிறிஸ்துவின் ஒரே உடலாக மாறுவதற்கான பாதையில் உதவி வரும், ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடனும் கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடனுமான கலாச்சார ஒத்துழைப்பிற்கான கத்தோலிக்க அவையின் மாணவர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுடன் கலாச்சார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் கத்தோலிக்க அவை உருவாக்கப்பட்டதன் 60ஆம் ஆண்டையொட்டி அவ்வவையின் மாணவர்களை ஜனவரி 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களையும், அவர்களின் பணிக்கு தன் நன்றியையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைச் சிறப்பிக்க நம்மையே தயாரித்துவரும் இவ்வேளையில் இச்சந்திப்பு இடம்பெறுவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்றார்.

கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினரும், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினரும் பயிற்சிபெற்று அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று அனுபவங்களை பகிர உதவுவதன் வழி, இந்த கத்தோலிக்க அவை சிறப்புச் சேவையாற்றி வருகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருஅவையின் உதவிபெற்று கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை மாணவர்கள் தங்கள் அனுபவங்களை கத்தோலிக்க மாணவர்களுடன் பகிர்வதற்கும், இவர்களிடமிருந்து அனுபவங்களைப் பெறுவதற்கும் கலாச்சார ஒத்துழைப்புக்கான கத்தோலிக்க அவை உதவி வருகின்றதை சுட்டிக்காட்டி, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே இருக்கும் சுவர்களையும் முன்சார்பு எண்ணங்களையும் தகர்க்கவும், பேச்சுவார்த்தைகளும் நட்புறவும்கூடிய பாலங்களைக் கட்டியெழுப்பவும் இது உதவுகின்றது என்றார்.

இயேசுவின் திருத்தூதர்கள் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் ஒன்றிப்பை இயேசுவில் கண்டதுபோல், நாமும் அப்பாதையைப் பின்பற்றவேண்டும் என கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அனுபவங்களை உடன்பிறந்த உணர்வுடன் பகிர்வதன் அடிப்படையில், நம் கடந்தகால தவறுகள், தப்பெண்ணங்கள், பாவங்கள் ஆகியவை குணப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

வரும் ஆண்டுகளில் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளல், சகோதரத்துவ மதிப்பு, பேச்சுவார்த்தைகள், பகிர்வு, பிறரன்புப் பணிகள், ஒன்றிப்பு முயற்சிகள் போன்றவை பெருமளவில் இடம்பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இதன் வழி அமைதி மற்றும் ஒன்றிப்பின் விதைகளைக் காணும் வாய்ப்பு உலகிற்கு கிட்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2024, 15:09