ҽ

அருள்பணி Lorenzo Milani தேசியக்குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணி Lorenzo Milani தேசியக்குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

நற்செய்தி அறிவிப்பின் உண்மையான ஊழியர் அருள்பணி மிலானி

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர் என்ற இறைவார்த்தைகளுக்கிணங்க செயல்பட்டவர் அருள்பணி மிலானி

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏழை எளிய மக்களுக்கான நற்செய்தி அறிவிப்பின் உண்மையான ஊழியராகவும் அன்பான அருள்பணியாளராகவும் விளங்கியவர் அருள்பணி லொரேன்சோ மிலானி என்றும், மனமாற்றம் என்பதை முழுமனித மற்றும் ஆன்மிக அனுபவத்தின் இதயமாகக் கொண்டு வாழ்ந்தவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 22 திங்கள் கிழமை வத்திக்கானின் தூய கிளமெந்தினா அறையில், மறைந்த அருள்பணி லொரேன்சோ மிலானி அவர்கள் பிறப்பின் நூற்றாண்டு விழா தேசியக்குழு உறுப்பினர்கள் ஏறக்குறைய 150 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது வாழ்வின் மிக முக்கியமானது, ஏழைகளுக்காகப் பணியாற்றவேண்டும் என்று அவர் பெற்ற மனமாற்றமே என்றும் கூறினார்.

அமைதியற்ற தேடலின் இறுதியில் கிறிஸ்துவைக் கண்டறிந்து முழுமையாக அவரைப் பின்பற்றிய அருள்பணி மிலானி அவர்கள், ஏழைக்குழந்தைகளின் மாண்பை மீட்டெடுத்தல், அவர்களுக்கான மரியாதை, உரிமைகள், குடியுரிமை, எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் பிள்ளைகள் அவர்கள் என்பதை அங்கீகரித்தல் போன்றவற்றைச் சிறப்பாகச் செய்தார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலாளித்துவ சலுகைகள், செல்வம், வசதி வாய்ப்புக்கள், மேலுயர்ந்த கலாச்சாரம் ஆகியவற்றை விட்டுவிட்டு, ஏழ்மை, தாழ்ச்சி கொண்டு நற்செய்தியை முழுமையாக தனது வாழ்வில் அனுபவித்தார் என்றும், பர்பியானா பள்ளியில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் என்றும் கூறினார்.

“நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்” என்ற இறைவார்த்தைகளுக்கிணங்க செயல்பட்டவர் அருள்பணி மிலானி என்றும், கடைநிலையில் உள்ள மக்களின் மாண்பை மீட்டெடுத்தல் என்னும் பணியினைச்  செய்து கடவுளை மகிழ்ச்சிப்படுத்தும் செயலைச் செய்தவர் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2024, 13:04