ҽ

திருத்தந்தையுடன் பின்லாந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு திருத்தந்தையுடன் பின்லாந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு  (ANSA)

பயணிக்கும் திருஅவையாக ஒன்றிணைந்து நடைபோடுவோம்

திருமுழுக்குப் பெற்ற குழுவாக இருக்கும் அங்கத்தினர்கள் அனைவரும் கிறிஸ்துவை நோக்கி ஒன்றிணந்து முன்னோக்கிச் செல்வதன் வழி கிறிஸ்தவ ஒன்றிப்பை அடையலாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், ஜனவரி 19, வெள்ளியன்று பின்லாந்து நாட்டின் புரோட்டஸ்டான்ட் பிரிந்த சபையினர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர், மற்றும் கத்தோலிக்கர் அடங்கிய கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயணிக்கும் திருஅவையாக ஒன்றிணைந்து நடைபோடுவோம் என அழைப்புவிடுத்தார்.

ஒவ்வோர் ஆண்டும் பின்லாந்தின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவை திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை, இவ்வாண்டு சந்திப்பின்போது, எவ்வாறு பல்வேறு கிறிஸ்தவ சபைகளில் புனிதர்களுக்கு வணக்கத்தைத் தெரிவிப்பது நார்டிக் நாடுகளில் ஒற்றுமைக்கு வழிகோலுவதாக உள்ளது என்ற மகிழ்ச்சியை வெளியிட்டார்.

நார்டிக் நாடுகளின் புனிதர்கள் பிரிஜிதா, ஹென்ரிக், ஒலாவ் ஆகியோரைக் குறித்து பின்லாந்து குழு சுட்டிக்காட்டியதை தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஒலாவ் அவர்கள் இறந்ததன் ஆயிரமாம் ஆண்டு 2030ஆம் ஆண்டு கொண்டாடப்படவிருப்பது கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான ஜெபத்தையும், முயற்சிகளையும் தூண்டுவதாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

திருமுழுக்குப் பெற்ற குழுவாக இருக்கும் அங்கத்தினர்கள் அனைவரும் கிறிஸ்துவை தங்கள் பொதுக் குறிக்கோளாகக் கொண்டு முன்னோக்கிச் செல்வதில் கிறிஸ்தவ ஒன்றிப்பை விரைவில் அடைவோம் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் நேர்மையற்ற குறுக்குவழிகளையும், பொய்யான பாதைகளையும் களைந்து, நானே வழி என உரைத்த இயேசுவின் பாதையில் நாம் ஒன்றிணைந்து பயணிக்கும்போது, வறியோரையும், கைவிடப்பட்டோரையும், கடவுளால் கைவிடப்பட்டதாக நினைப்போரையும், நம்பிக்கை மற்றும் விசுவாசப் பாதையிலிருந்து விலகிச் சென்றுள்ளோரையும் வரவேற்க மறக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுரைக்குப்பின், வானகத்திலுள்ள எம் தந்தாய் என்ற, இயேசு கற்பித்த செபத்தை அக்குழுவுடன் இணைந்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2024, 14:57