ҽ

2024.01.11 Delegazione delle "Sentinelle della Santa Famiglia" 2024.01.11 Delegazione delle "Sentinelle della Santa Famiglia"  (VATICAN MEDIA Divisione Foto)

அன்னை மரியாவின் பார்வையைக் கொண்டிருங்கள்!

மற்றவர்கள் மீதும் உண்மையின்மீதும் நீங்கள் கொண்டுள்ள பார்வை, பொறுமையும், புரிதலும், இரக்கமும் கொண்ட கன்னி மரியாவின் பார்வைப்போல் இருக்கட்டும் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், அன்னை மரியாவுடன் இணைந்த நிலையில்  நீங்கள் அனைவருமே அன்னையர்கள்தாம் என்றும்,. உங்கள் இறைவேண்டலும்  'காவலர்கள்' என்ற உங்கள் அர்ப்பணிப்பும் அன்னை மரியாவின் குணாதிசயங்களுடன் ஒத்ததாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 11, இவ்வியாழனன்று, திருக்குடும்பத்தின் காவலர்கள் அதாவது, Sentinels என்று அழைக்கப்படும் அவ்வியக்கத்தின் பிரதிநிதிகள் 31 பேரை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, கடவுள் எது மிகவும் சிறியதோ அதன்மீது அன்பு கூர்ந்து, அதனை நிறைந்தளவில் கனிகொடுக்கச் செய்கிறார் என்றும் தெரிவித்தார்.

உங்கள் இயக்கம் பெண்களால் மட்டுமே ஆனது என்பது திருஅவையில், கன்னி மரியாவின் உருவத்தில் உங்கள் குறிப்பிட்ட மற்றும் ஈடுசெய்ய முடியாத அழைத்தலை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை,

அன்னையிடம் பரிந்துபேசும் படி இறைவேண்டல் செய்வது மட்டுமல்லாமல்,  திருஅவை மற்றும் உலகிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்க்கும் ஒரு தாயாக, அவருடைய பரிந்துபேசுதலிலும் தாய்மையிலும் ஒன்றித்திருக்கிறீர்கள் என்றும் அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை.

நீங்கள் மற்றவர்களின் மீதும் உலகத்தின் உண்மைகளின் மீதும் செலுத்தும் பார்வையை நான் முதலில் சிந்தித்துப் பார்க்கின்றேன் என்றும் உரைத்த திருத்தந்தை, இந்தப் பார்வை, பொறுமையும், புரிதலும், இரக்கமும் கொண்ட கன்னி மரியாவின் பார்வைப்போல் இருக்கட்டும் என்றும் விளக்கினார்.

உங்கள் பணிகளிலும் இறைவேண்டல்களிலும் மட்டுமல்ல, உங்கள் அன்றாட வாழ்க்கையில், குடும்பத்தில், பங்குத்தளங்களில், உங்கள் முழு வாழ்க்கையையும், உங்கள் எல்லா உறவுகளையும் இந்தப் பார்வையால் ஈர்க்க நான் உங்களை அழைக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.

இறுதியாக இளகிய மனம் கொண்டிருங்கள் என்றும், நம் உலகத்துக்கும், நம் சகோதரர் சகோதரிகளுக்கும் முன்னெப்போதையும் விட இந்த இளகிய மனம் தேவை என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, சிலர் அகராதியிலிருந்து நீக்க விரும்பும் வார்த்தையாகவும் இது அமைந்திருக்கின்றது என்றும், இன்று உலகம் சில வேளைகளில் எவ்வளவு கடுமையானதாக இருக்கிறது, நம் அண்டை வீட்டாரின் துன்பம் மற்றும் தேவைகளைப் பற்றி கவலைப்படாமல், செவிடாகவும், அலட்சியமாகவும் இருக்கிறது என்றும் கூறினார்.

அன்னை மரியா இயேசுவுக்கும், திருஅவைக்கும், இவ்வுலகிற்கும் இளகிய மனம் கொண்டவராக இருந்தார் என்றும், ஏதோ ஒரு வகையில் இதனை வெளிப்படுத்தக்கூடிய அழைப்பாக உங்கள் பணி நிச்சயம் விளங்கிட வேண்டும் என்றும் அவர்களிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2024, 15:29