ҽ

அருளாளர் Mary Leonia Paradis அருளாளர் Mary Leonia Paradis  

கனடா அருளாளருக்குப் புனிதர் பட்டம் வழங்க திருத்தந்தை ஒப்புதல்!

ஆயர் Guregh Hovhannes Zohrabian, சகோ. Gianfranco Maria Chiti, அருள்பணியாளர் Sebastián Gili Vive, குழந்தை இயேசுவின் புனித தெரேசாள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Maddalena ஆகிய நால்வரின் வீரத்துவப் நற்பண்புகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருக்குடும்பத்தின் சிறிய சகோதரிகள் சபையை நிறுவிய கனடா நாட்டைச் சேர்ந்த அருள்சகோதரி அருளாளர் Mary Leonia Paradis அவர்களின் பரிந்துரையின் வழியாக நிகழ்ந்த ஓர் அருளடையாளத்தை அங்கீகரித்து அவரை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆணை ஒன்றை வெளியிடுவதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் போலந்து நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் Michał Rapacz-இன் மறைசாட்சியம் மற்றும், மற்ற நான்கு நபர்களின் வீரத்துவ நற்பண்புகள் தொடர்பான ஆணைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்சகோதரி Mary Leonia Paradis-இன் வாழ்க்கைப் பயணம்

1984 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி Montreal-இல் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட அருள்சகோதரி Mary Leonia Paradis, 1986-ஆம் ஆண்டு Quebec-யிலுள்ள புனித Jean-sur-Richelieu-இல் பல உறுப்பு செயலிழப்பு மற்றும் மூளை நோயுடன் கூடிய நீடித்த பெரினாட்டல் மூச்சுத்திணறல் கொண்ட புதிதாகப் பிறந்த ஒரு பெண் குழந்தையைக் குணப்படுத்திய பெருமைக்குரியவர்.

அருள்சகோதரி Mary Leonia Paradis அவர்கள், 1840-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி கனடாவின் L'Acadie இல் பிறந்தார். 13 வயதில், அவர் திருச்சிலுவையின் மரியானைட் சகோதரிகளின் சபையில் சேர்ந்தார். திருச்சிலுவை சபையின் அருள்தந்தையர்கள் இல்லங்களில் பணியாற்றுவதற்காகவும், இளையோரின் கல்விக்காகவும் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார்.

1880-ஆம் ஆண்டு 'திருக்குடும்பத்தின் சிறிய சகோதரிகள் சபையை' நிறுவுவதற்கு முன்பு கனடா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலுள்ள பல்வேறு துறவு இல்லங்களில் பணியாற்றினார். கனடாவிற்கு அப்பால், இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இச்சபைக்கான புதிய துறவு இல்லங்கள் திறக்கப்பட்டன. அன்னை மேரி லியோனியா 1912-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி, Quebec-இல் உள்ள Sherbrooke-இல், தனது 72-வது வயதில் இறைபதம் அடைந்தார்.

அருள்பணியாளர் Michał Rapacz மறைச்சாட்சி மரணம்

அருள்பணியாளர் Michał Rapacz, 1904-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதியன்று, போலந்தின் டென்சினில் பிறந்தார். 1926-ஆண்டில் கிராகோவ் குருமடத்தில் சேர்ந்த இவர், அங்கே ஐந்து ஆண்டுகள் குருத்துவப் படிப்பிற்குப் பிறகு அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியின் கீழ், போலந்தில் ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சி நிறுவப்பட்ட வேளை, தலத் திருஅவையின் மீது அவ்வரசு கடுமையான அடக்குமுறையைத் தொடங்கியது.

1946-ஆம் ஆண்டு, மே மாதம் 11-ஆம் தேதி இரவு, ஆயுதமேந்திய குழுவொன்று, Płoki-யிலுள்ள அருள்பணியாளர் மைக்கேலின் இல்லத்திற்குள் நுழைந்து, அவரைக் கடத்திச் சென்று, பின்னர் அருகிலுள்ள காட்டில் அவரை படுகொலை செய்தது. இவ்வாறு அவர் கிறிஸ்துவுக்காக வீரமரணமடைந்தார்.

வீரத்துவப் பண்புகள் அங்கீரிக்கப்பட்ட நால்வர்

ஆயர் Guregh Hovhannes Zohrabian, சகோ. Gianfranco Maria Chiti, அருள்பணியாளர் Sebastián Gili Vive, குழந்தை இயேசுவின் புனித தெரேசாள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Maddalena ஆகிய நால்வரின் வீரத்துவப் பண்புகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2024, 15:56