ҽ

கீழைவழிபாட்டுமுறைத் திருஅவை கிறிஸ்துபிறப்பின் ஒளியினால் நிரப்பப்பட..

இன்றைய நாளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடும் ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றும் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினருக்கு மகிழ்ச்சி நிறைந்த சகோதரத்துவ உணர்வில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடும் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினர் அனைவரும், கடவுளின் ஒளி, அன்பு மற்றும் அமைதியால் நிரப்பப்படட்டும் என்றும், உலக மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழ உலக அமைதிக்காக தொடர்ந்து செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 7 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நாளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடும் கீழைவழிபாட்டு முறை திருஅவை கிறிஸ்தவ மக்களுக்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

திருமுழுக்கு திருவிழாவன்று திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற குழந்தைகள் அனைவருக்காகவும் அவர்களது குடும்பத்தார்க்காகவும் செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிஸ்டைன் சிற்றாலயத்தில் தான் சிறு குழந்தைகள் 16 பேருக்கு திருமுழுக்கு அருளடையாளம் வழங்கியதையும் எடுத்துரைத்தார்.

இன்றைய நாளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடும் ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றும் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினருக்கு மகிழ்ச்சி நிறைந்த சகோதரத்துவ உணர்வில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், ஆண்டவர் இயேசுவின் பிறப்பு அவர்களை ஒளி, அன்பு மற்றும் அமைதியால் நிரப்பட்டும் என்றும் வாழ்த்தினார்.

கொலம்பியாவில் கடத்தப்பட்ட அனைத்து மக்களையும் நிபந்தனையின்றி விடுவிக்க அவர்களுக்காக தன்னுடன் இணைந்து செபிக்கக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள்,  கடவுளின் முன்பாக ஒன்றிணைந்து செபிக்கும் இந்த செயல் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் சூழலை ஊக்குவிக்க உதவட்டும் என்றும் கூறினார்.

அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காங்கோ ஜனநாயகக் குடியரசின் மக்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  அமைதிக்காக தொடர்ந்து செபியுங்கள், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் உலகம் முழுவதும் அமைதி நிலவ அமைதிக்காக செபியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2024, 13:25