ҽ

இயேசுவை ஆராதிப்பது வாழ்வின் பாதையைக் காண்பதற்கான வாய்ப்பு

கடவுள் எளிய குழந்தையாக அன்பானவராக நமக்காக பிறந்தார் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருநற்கருணையில் இயேசுவை வணங்கி ஆராதிப்பது என்பது நேரத்தை வீணாக்குவதல்ல மாறாக நேரத்திற்கான அர்த்தத்தை வழங்குவது என்றும், இதயத்திற்கு ஊட்டமளிக்கும் எளிமையான அமைதியில் வாழ்வின் பாதையைக் கண்டறிவது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 6 சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த ஏறக்குறைய 40000 திருப்பயணிகளுக்கு திருக்காட்சிப் பெருவிழா நாளன்று வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

ஞானியர் குழந்தை இயேசுவைக் கண்டது போல நாமும் நம்பிக்கை, ஆச்சர்யம், ஆர்வம், கொண்டு குழந்தை இயேசுவைக் காண வேண்டும் என்றும், கடவுள் எளிய குழந்தையாக அன்பானவராக நமக்காக பிறந்தார் என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தை இயேசுவின் முன் நின்று அவரைப் போல எளியவராகவும் நம்பிக்கை உடையவராகவும் அவரது ஆச்சர்யமான வாழ்வை நாம் வாழ அருள்வேண்டுவோம் என்றும் இதனால் உலகின் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான முன்னோக்குகளை நம்மால் பெற முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் தாயும் நமது தாயுமான அன்னை மரியா, குழந்தை இயேசுவின் மீதும், எல்லாக் குழந்தைகளின் மீதும், குறிப்பாகப் போர்கள் மற்றும் அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நமது அன்பை அதிகரிக்க உதவட்டும் என்று கூறி தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2024, 15:42