ҽ

பாத்திமா அன்னை திருத்தலத்தில் நோயாளிகளைச் சந்தித்த திருத்தந்தை கோப்புப்படம் (5.8.23) பாத்திமா அன்னை திருத்தலத்தில் நோயாளிகளைச் சந்தித்த திருத்தந்தை கோப்புப்படம் (5.8.23)  (ANSA)

32ஆவது உலக நோயாளர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

நோய்க்கு முதலில் தேவையான மருந்து, இரக்கமும் மென்மையும் நிறைந்த உடனிருப்பே - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

"மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல" என்ற தொடக்கநூலின் இறைவார்த்தைகளை வலியுறுத்தி உடல்நலமற்றவர்களை கவனித்து சிகிச்சை அளிப்பதன் வழியாக உறவுகளை காத்துக்கொள்ளுங்கள் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரும் பிப்ரவரி 11 அன்று சிறப்பிக்கப்பட இருக்கும் 32ஆவது உலக நோயாளார் தினத்திற்கான செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பான கடவுள், உறவுகளின் பரிமாணத்தை மனித உள்ளத்தில் பதித்து, ஒற்றுமையுடன் வாழ மனிதனைப் படைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நமது வாழ்க்கை, தமதிரித்துவத்தின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நட்புறவிலும் அன்புறவிலும் நமது உறவுகளில் நம்மை முழுமையாக உணர அழைக்கப்படுகின்றோம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், நாம் தனியாக அல்ல ஒன்றாக இருக்கவே படைக்கப்பட்டுள்ளோம் என்பதனையும் வலியுறுத்தியுள்ளார்.

வேதனையையும் மனிதாபிமானமற்ற செயலையும் வருவிக்கும், கைவிடப்படுதல், தனிமை போன்றவை நம்மை பயமுறுத்துகின்றன என்றும், பலவீனம், நிச்சயமற்ற தன்மை, பாதுகாப்பின்மை போன்ற காலங்களில் குறிப்பாக கடுமையான நோயின் தொடக்க காலத்தில் இது இன்னும் அதிகமாகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் நோயாளர்கள் அனுபவித்த துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள்,  போராலும், அதன் துயரமான விளைவுகளாலும், ஆதரவின்றி, உதவியின்றி தவிப்பவர்களின் துன்பம் மற்றும் தனிமை நிலையையும் எடுத்துரைத்துள்ளார்.

சமூக நோய்களில் போர் மிகவும் கொடூரமானது என்றும் மிகவும் பலவீனமான மக்கள் இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்,  அமைதி மற்றும் அதிக வளங்கள் கொண்ட நாடுகளில் கூட முதுமை மற்றும் நோயினால் பலர் தனிமை என்னும் கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

தனிமை என்பது கடவுள் இருப்பின் அர்த்தத்தை இழக்கச் செய்கிறது, அன்பின் மகிழ்ச்சியைப் பறிக்கிறது, வாழ்க்கையின் அனைத்து முக்கியமான நிகழ்வுகளிலும் தனிமையின் அடக்குமுறை உணர்வை அனுபவிக்க வைக்கிறது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள்,  நோய்க்கு முதலில் தேவையான மருந்து, இரக்கமும் மென்மையும் நிறைந்த உடனிருப்பே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அன்பிற்காக உருவாக்கப்பட்ட நாம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ அழைக்கப்படுகிறோம் என்றும், நமது இருப்பின் இந்த பரிமாணம், நோய் மற்றும் பலவீனமான காலங்களில் நம்மை ஆதரிக்கிறது, நாம் வாழும் சமூகத்தின் நோய்களைக் குணப்படுத்த நாம் அனைவரும் ஒன்றாகக் கடைப்பிடிக்க வேண்டிய முதல் சிகிச்சை இது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனிமனித பண்பாடு, அலட்சியம், வீண் விரயம் ஆகியவற்றை எதிர்ப்பதற்கும், மென்மை மற்றும் இரக்கத்தின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும், நோயுற்றவர்கள், பலவீனமானவர்கள், ஏழைகள் திருஅவையின் இதயத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2024, 11:11