ҽ

Vinitaly இயக்கத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் Vinitaly இயக்கத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

படைப்பாளரான கடவுள் நம்மிடம் ஒப்படைத்த படைப்பைக் காப்போம்

அசிசியின் தூய பிரான்சிஸை உதாரணமாகக் கொண்டு நல்லிணக்கம் பலவீனமானவர்களுக்கு உதவுதல், படைப்பிற்கு மரியாதை செலுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து ஊக்கமுடன் செயல்பட வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நிலம், திராட்சை இரசம், விவசாயத் திறன், தொழில் முனைவோர் செயல்பாடு ஆகியவை கடவுளின் பரிசுகள் என்றும், படைப்பாளரான கடவுள், அவற்றைப் பாதுகாத்து பராமரிக்க, நம்மிடம் ஒப்படைத்துள்ளார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 22 திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் Vinitaly என்னும் இத்தாலிய ஒயின் தயாரிப்பாளர்கள் இயக்கத்தால் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பினர்கள் ஏறக்குறைய 100 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மரியாதை, நிலைத்தன்மை, பலன் தரும் திறன் போன்றவை ஆன்மாவிற்கான விலைமதிப்பற்ற செய்திகள் என்றும், அவை இயற்கையின் இசைவு மற்றும் செடி, கொடிகளின் இயக்கத்திலிருந்து நன்கு கற்றுக் கொள்ளப்படுகின்றன என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், நமது உணர்திறன், நேர்மை போன்றவற்றினால் மனித உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டும் திராட்சை இரசமாக அவற்றை நாம் மாற்ற முடியும் என்றும் கூறினார்

ஒரு தரமான தயாரிப்பிற்கு தொழில் நுட்பங்கள் மற்றும் வணிக பயன்பாடு மட்டும் போதாது என்றும், நிலம், செடி கொடி, விளைச்சல், அறுவடை, நொதித்தல் மற்றும் பதப்படுத்துதல் போன்ற செயல்முறைகளுக்கு நிலைத்தன்மை, கவனம் மற்றும் பொறுமை தேவை அதிகம் தேவை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எண்ணற்ற திறன்களை உள்ளடக்கிய இந்த செயல்முறை கல்வி வழியாக மட்டுமன்று, நடைமுறை வாழ்க்கை, அனுபவம், அறிவு போன்றவற்றை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் இலாபகரமான வழியில் மனிதப் பரிமாணத்தில் நாம் அதனை எப்படி ஈடுபடுத்துகின்றோம் என்பதில் அடங்கியிருக்கின்றது என்றும் கூறினார்.

அசிசியின் தூய பிரான்சிஸை உதாரணமாகக் கொண்டு நல்லிணக்கம், பலவீனமானவர்களுக்கு உதவுதல், படைப்பிற்கு மரியாதை செலுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து ஊக்கமுடன் செயல்பட வலியுறுத்திய திருத்தந்தை, ஒயின் தயாரிப்பாளர்களது பணியும் செயலும், அமைதி மற்றும் நன்மையைக் கொண்டு வர வாழ்த்தினார்.    

இயேசு தனது சீடர்களுக்கு ஆற்றிய இறுதி உரையில் “உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்” என்று கூறுவதிலிருந்து இயேசு, கடவுளை திராட்சைத் தோட்ட உரிமையாளராகப் பார்த்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், திருத்தூதர் யாக்கோபின் திருமடலில் உள்ள, பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார்." (யாக் 5:7) என்ற வரிகளையும் மேற்கோள்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2024, 13:15