ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

இறைவனுக்காக இதயத்தை திறக்க உதவிசெய்யும் பாடல்கள்

இயேசுவின் மீது அன்பு நிறைந்திருக்கும் போது குரலில் இனிமை கலந்து மக்களின் இதயங்களில் அம்பு போல பாய்ந்துவிடுகின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இனிமையான குரலால் பாடல்கள் பாடி, மக்கள் அனைவரும் இறைவனை நோக்கி செபிக்கவும், இதயங்களை இறைவனுக்காக திறக்கவும் பாடகர்கள் உதவுகின்றார்கள் இதுவே திருஅவை வாழ்வின் அடிப்படை என்றும் இசை தூயது, அதன் ஆன்மா இறைவார்த்தை என்பதை பாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 30 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் Pueri Cantores என்னும் பன்னாட்டு பாடகர் கூட்டமைப்பினர் ஏறக்குறைய 3500 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சி, செபம் தாழ்ச்சி ஆகிய பண்புகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்து பாடல்களால் அரங்கத்திற்கு புது வாழ்வு கொடுத்த அவர்களை வாழ்த்தினார்.

பாடகர்கள்
பாடகர்கள்

மகிழ்ச்சியைத்தரும் பாடல்     

பாடுவது மகிழ்ச்சியைத் தருகின்றது, இசையைக் கற்றுக்கொடுத்தவர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள், பாரம்பரியமான பாடல்கள் என அனைத்தின் கொடையாக பாடகர்கள் பாடல்களை மகிழ்ச்சியுடன் பாடுகின்றார்கள் என்றும், விலைமதிப்பற்ற பரிசான பாடும் திறமையை மகிழ்ச்சியுடன் வளப்படுத்துங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.(2 கொரி 9:7) என்ற இறைவார்த்தைக்கேற்ப மகிழ்ச்சியான பாடல்கள் வழியாக அதை கேட்பவருக்கு சிறந்த பரிசினை அளிக்கின்றார்கள் என்றும், வேதனை மற்றும் சலிப்பினால் துன்புறும் மக்கள், ஏராளமான இளையோர் போன்றோரின் இதயங்களைப் பாடல்கள் தொட்டு அவர்களின் வாழ்க்கைக்கு அழகூட்டி, வாழ்க்கையின் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்கின்றது என்றும் கூறினார்.

ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோர்.
ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோர்.

செபிக்க உதவும் பாடல்

பாடல்கள் வழியாக பிறரை செபிக்க தூண்டும் பாடகர்கள், பாடும்போது மட்டும் இல்லாமல் எல்லா சூழலிலும் எல்லா நாளிலும் இதயத்தை இறைவனுக்கு மிக அருகில் வைத்து செப மனநிலையோடு வாழ்வது முக்கியம் என்றும், இயேசுவின் மீது அன்பு நிறைந்திருக்கும் போது குரலில் இனிமை கலந்து மக்களின் இதயங்களில் அம்பு போல பாய்ந்துவிடுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்கு சமம்” என்ற தூய அகுஸ்தினாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாடுவது அன்பின் செயல் என்றும், பாடும்போது வார்த்தை, இசை, இதயம், குரல், செப மனநிலை மற்றும் கலைஆர்வத்துடன் செபிக்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியில் பாடும் பாடல்களின் போது அப்பாடலின் வரிகளை நாம் இதயத்தால் உணர்ந்து பாடி செபிக்கின்றோம் என்றும் கூறினார்.

கடவுள் மன்னிப்பதில் தாராளமானவர், தூயவர், நல்லவர், நம் தேவைகள் அனைத்தையும் கவனிப்பவர், எப்போதும் நம்முடன் நடப்பவர் என்பதை பாடல்களின் வழியாக நாம் உணர்கின்றோம் என்றும், ஒன்றிணைந்துப் பாடுதல், செபித்தல், வழியாக இணக்கம், செவிசாய்த்தல், காத்திருத்தல் போன்றவற்றை எடுத்துரைக்கின்றார்கள் என்றும் கூறினார்.

இசையோடு பாடும் பாடல்கள் வழியாக பாடகர்கள், மற்றவர்களையும் இணைத்து அவர்களும் அதுபோல் ஒன்றிணைந்து வாழ உதவுகின்றார்கள் என்றும், ஒன்றிணைந்து நடத்தல் மற்றும் ஒன்றிணைந்து வளர்தலைக் கற்பிக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை .

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

தாழ்ச்சியைத் தரும் பாடல்

தாழ்ச்சி உருவாகும் இடமாக பாடல்கள் உள்ளன, ஏனெனில் தனியாகப் பாடும் பாடகர் கூட தன்னை இசையமைப்பாளர்கள் வழிநடத்துபவர்கள் குழுவோடு இணைத்து அவர்களது வழிநடத்தலுக்கு ஏற்ப பாடுகின்றார் என்றும், கடவுளின் பணியான பாடலில் கடவுளை சந்திக்க பிறருக்கு உதவுதல், தகுந்த இடத்தில் அமைதியாக இருந்து இறைகுரலை மக்கள் கேட்க வாய்ப்பளித்தல் போன்றவற்றை செய்கின்றார்கள் என்றும் கூறினார்.

தன்னை முன்னிலைப்படுத்தவோ அல்லது பிறரைவிட தன்னை சிறந்தவராகவோ கருதும் பாடகர்கள் போல இல்லாது, ஒற்றுமையைத் தரும் தாழ்ச்சியினால் கடவுளுடனும் மற்றாவர்களுடன் உண்மையான நட்புறவை வெளிப்படுத்துங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை  

பாடல்களை அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாட அதிக பயிற்சியும் உழைப்பும் தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதேபோல ஒன்றிணைந்து வாழ்வதற்கும் பயிற்சியும் உழைப்பும் கட்டாயம் தேவை எனவே இணக்கமான செயல்கள், ஒளி நிறைந்த முகங்கள், அழகான இனிமையான குரல்கள் வழியாக ஒன்றிணைந்து வாழ்வது மதிப்பானது என்பதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள் என்றும் கூறினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2023, 11:41