திருஅவையும் பொதுச்சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நீங்கள் குடும்பங்கள், நாடுகள், திருஅவைச் சமூகம் மற்றும் சமுதாயத்திற்கிடையே ஓர் உறவு பலமாக விளங்குகிறீர்கள் என்றும், எல்லோருக்கும் உங்கள் இதயங்களின் கதவுகளைத் திறந்து வைத்திருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 7, இவ்வியாழனன்று, இதாலியிலுள்ள புனித பவுல் தேசியக் கழகத்தினர் 200 பேரை திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஏமாற்று மற்றும் வெறுப்பு உணர்வுகளால் உலகம் வன்முறையால் சூழப்பட்டிருக்கும் இவ்வேளையில், கல்விக்காக, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, உடன்பிறந்த உறவின் அழகைத் தெரிவிப்பதற்காக உழைப்பதை நிறுத்தாதீர்கள் என்றும் வலியுறுத்தினார்.
உங்கள் பொழுதுபோக்கு, கலாச்சார மற்றும் கலை திட்டங்கள் எப்போதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஒருங்கிணைந்த கல்வியை நோக்கமாகக் கொண்டவை என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நாம் முழு நபர்களையும், அவர்களைப் பாதிக்கும் உளவியல், ஆன்மிகம், அறிவுசார், உடல் ஆகிய அனைத்துப் பரிமாணங்களையும் நம் உள்ளத்தில் கொண்டிருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருஅவையும் பொதுச்சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன என்றும், இவை இரண்டிற்குமிடையே எந்த முரண்பாடுகளும் இருக்க முடியாது, ஏனென்றால் இவை இரண்டும் தனிமனிதன் மற்றும் சமூகத்தின் நன்மைக்கு பங்களிக்கின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தில், உங்கள் சொற்பொழிவுகள் மற்றும் கழகங்களின் வலைப்பின்னல், குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதிலும், மாநிலங்களிலுள்ள பொது மக்களின் நல்வாழ்வுக்கான பொதுச்சமூக நடைமுறைகளை நிறைவு செய்வதிலும் ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்