ҽ

புதன் மறைக்கல்வி உரை நிதானத்தையும் மகிழ்ச்சியையும் தரும் குடில்

டிசம்பர் 20 புதன் கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு கிறிஸ்து பிறப்பு குடில் மகிழ்ச்சியையும் நிதானத்தையும் தருகின்றது என்ற கருத்தில் தனது உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. உள்ளத்தில் உவப்புடனும், இல்லத்தில் மகிழ்வான பல தயாரிப்புக்களோடும் பிறக்க இருக்கும் பாலனின் வருகையை ஆவலுடன் நாம் எதிர்கொண்டு இருக்கும் வேளையில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கமானது கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்குத் தயார் நிலையில் இருந்தது. கிறிஸ்து பிறப்பு குடில், மரம் என அரங்கமே விழாக் கோலம் கொண்டிருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகைக்காகத் திருப்பயணிகள் ஆவலுடன் காத்திருந்தனர்.

டிசம்பர் 20 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு கிறிஸ்து பிறப்பு குடிலானது நிதானத்தையும் மகிழ்வையும் தருகின்றது என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைக்க அரங்கத்தை ஆவலுடன் வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மக்கள் கரவொலி எழுப்பி மகிழ்வுடன் அவரை வரவேற்க, சிலுவை அடையாளத்துடன் புதன் மறைக்கல்வி உரையினை  துவக்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதன்பின் லூக்கா நற்செய்தியில் உள்ள இடையர்களும் வானதூதர்களும் என்ற பகுதியானது இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், அரபு, போர்த்துக்கீசியம், என்பன போன்ற பல மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.  

லூக்கா 2; 10=12

வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.

நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிதானம் மற்றும் மகிழ்ச்சி பிறக்கும் இடமான கிறிஸ்துபிறப்பு குடில் என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

800 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1223 ஆம் ஆண்டு கிரேச்சோவில் கிறிஸ்து பிறப்பு காட்சியை உருவாக்கினார் புனித பிரான்சிஸ் அசிசியார். நமது வீடுகளிலும் பிற இடங்களிலும் அதற்கான தயாரிப்பு வேளைகள் நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில் கிறிஸ்து பிறப்பு குடில் உருவான வரலாறு பற்றி அறிந்து கொள்வது நல்லது.

புனித பிரான்சிஸின் நோக்கம் என்ன என்பதை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. "நான் பெத்லகேமில் பிறந்த குழந்தையை அடையாளப்படுத்த விரும்புகிறேன், புதிதாகப் பிறந்த பாலன் இயேசுவிற்குத் தேவையான பொருட்கள் இல்லாததால் அவர் அனுபவித்த துன்பங்களை இடையூறுகளை என் கண்களால் பார்க்க விரும்புகிறேன். அவர் எருதுக்கும் கழுதைக்கும் இடையில் வைக்கோல் மீது எப்படி ஒரு தொட்டிலில் படுத்திருந்தார் என்று பார்க்க விரும்புகிறேன் என்று தூய பிரான்சிஸ் அசிசியார் கூறுகின்றார்.

பிரான்சிஸ் ஓர் அழகான கலைப் படைப்பை உருவாக்க விரும்பவில்லை மாறாக கிறிஸ்து பிறப்புக் காட்சியின் வழியாக பெத்லகேமின் ஏழை குடிலில் பிறந்த ஆச்சர்யத்திற்குரிய இறைவனின் அதிகப்படியான தாழ்ச்சியையும், நம்மீது கொண்ட அன்பினால் அவர் அடைந்த துன்பங்களையும் வெளிப்படுத்துகின்றார். எனவே தான் தூய பிரான்சிஸ் அசிசியாரின் சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் அதன் ஆசிரியர். “கிறிஸ்து பிறப்பு குடில் காட்சியில் நற்செய்தின் எளிமை ஒளிவிடுகின்றது. ஏழ்மை போற்றப்படுகின்றது. தாழ்ச்சி பரிந்துரைக்கப்படுகின்றது. Greccio ஒரு புதிய பெத்லகேம் போல் மாறிவிட்டது"

ஆச்சர்யப்படுதல் என்பது மிகவும் முக்கியமானது. கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்து பிறப்புக் குடிலை அழகானதாக, வரலாறு நிறைந்ததாக, சமயம் சார்ந்ததாக செபிக்கக்கூடியதாக மட்டும் பார்ப்பது போதுமானதாகாது. வார்த்தை மனுவுறுவான மறைபொருளின் ஆச்சர்யம் பாலனாக இயேசு பிறந்த ஆச்சர்யம் நமக்குத் தேவை. இத்தகைய ஆச்சர்யம் நமக்கு இல்லையென்றால் நமது நம்பிக்கை ஒரு மேலோட்டமான நம்பிக்கையாக அறிவியல் சார்ந்த நம்பிக்கையாக மட்டுமே இருக்கும். இதை ஒரு போதும் நாம் மறந்துவிடக் கூடாது.

கிறிஸ்து பிறப்பு குடில் நிதானம் உருவாகும் இடம்

கிறிஸ்து பிறப்பு குடில் காட்சியானது நிதானம் உருவாகும் இடமாக திகழ்கின்றது. இது பலவற்றை நமக்கு எடுத்துரைக்கின்றது. உண்மையில், வாழ்க்கையில் முக்கியமானவற்றை இழக்க நேரிடும் அபாயம் கிறிஸ்துபிறப்பை ஒட்டியே அதிகமாக உள்ளது. வாழ்க்கையின் அர்த்தத்தை சிதைக்கும் முரண்பாடுகள், நுகர்வு கலாச்சாரம், கவனச்சிதறல்கள், மற்றும் விளம்பரங்களின் அலைகளால் மூழ்கி, அத்தியாவசியங்களை புறக்கணிக்கும் ஆபத்தில் நாம் இருக்கின்றோம். ஏழ்மையில் இயேசு தம்மையே பரிசாகக் கொடுக்க வரும்போது, கிறிஸ்துமஸ் பலருக்கு பரிசுகளை வழங்குவதற்கான வாய்ப்பாக மட்டுமே மாறியுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் மனநிலை மாறுகிறது கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தை சிதைக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தில் நாம் மூழ்கியுள்ளோம். பரிசுகளை ஒருவருக்கொருவர் வழங்க விரும்புவது சரிதான் ஆனால் அதற்காக நாம் அதிகமான பொருள்களை வாங்க விரும்புவது அதிகரித்துள்ளது.  நமது கவனத்தை ஈர்த்து நிதானமின்றி நாம் செயல்பட வழி வகுக்கின்றது. கிறிஸ்து பிறப்பு காட்சியைக் குடிலில் பார்க்கும் நாம் கடவுள் மனுவுருவான ஆச்சரியத்தைக் காண முயல்வோம். சில நேரங்களில் இந்த ஆச்சர்யத்தை உணர்வதற்கு நம் உள்ளத்தில் இடம் இருப்பதில்லை, ஆனால் விருந்துகளை ஏற்பாடு செய்வதற்கும், நடத்துவதற்கும் நம்மிடத்தில் இடம் உள்ளது.

கிறிஸ்து பிறப்பு காட்சி முக்கியமானவற்றை நமக்கு எடுத்துரைக்க உருவாக்கப்பட்டது கடவுள் நம்மிடையே வாழ வருகின்றார். அதுமட்டுமல்லாமல் அத்தியாவசியமான உறவுகளான குடும்பம், உறவினர்கள் என அனைவரையும் அடையாளப்படுத்துகின்றார். யோசேப்பு மரியா குடும்பங்களையும், இடையர்கள் நமது உறவுகளையும் அடையாளப்படுத்துகின்றார்கள். குடிலில் இருக்கும் மனிதர்கள் ஏழ்மையிலும் எளிமையிலும் காணப்படுகின்றார்கள். இவர்கள் படைப்புடன் தங்களது இணக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். சில நேரங்களில் நாம் மனிதர்களை முன்னிலைப்படுத்த மறந்து விடுகின்றோம்.  

கிரேச்சோ பகுதி குடிலானது நிதானத்துடன் மகிழ்வைப்பற்றியும் எடுத்துரைக்கின்றது. ஏனெனில் மகிழ்ச்சி என்பது கேளிக்கைகளிலிருந்து வேறுபட்டது. சாலைகளில் செய்யப்படும் கேளிக்கை மற்றும் வேடிக்கை செயல்கள் ஒரு போதும் கெட்ட செயலாகாது. மாறாக வேடிக்கை ஒரு மனித செயலே. ஆனால் மகிழ்ச்சி என்பது அதைவிட இன்னும் ஆழமானது, அதிகமான மனித்தன்மை கொண்டது. சில நேரங்களில் மகிழ்ச்சி இல்லாமல் கேளிக்கைகளைப் பார்க்க நாம் தூண்டப்படுகின்றோம். அதிகப்படியான  சத்தம் போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட நமது உள்ளத்தில் மகிழ்ச்சி இருப்பதில்லை. சிரிக்க வைக்கும் கோமாளியின் உருவம் நம்மை கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் நமது உள்ளம் சோகமாக இருக்கிறது.  நல்ல கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்தின் வேராக மகிழ்ச்சி இருக்கின்றது. எனவே தான் "மகிழ்ச்சியின் நாள் வருகிறது, மகிழ்ச்சியின் நேரம் வந்துவிட்டது, இதுவரை கண்டிராத மகிழ்ச்சியில் மக்கள் மகிழ்கிறார்கள் […]. ஒவ்வொருவரும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்" என்று தூய பிரான்சிஸ் குறிப்பிடுகின்றார்.

ஆனால் அந்த சிறப்பான கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி எங்கிருந்து வந்தது? நிச்சயமாக வீட்டிற்கு பரிசுகளை கொண்டு வந்ததாலோ அல்லது ஆடம்பரமான கொண்டாட்டங்களை அனுபவித்ததாலோ அல்ல. மாறாக உங்களைத் தனியே விட்டுவிடாமல், உங்களை ஆற்றுப்படுத்தும் கடவுளின் மென்மை, இயேசுவின் நெருக்கத்தை உங்கள் கைகளால் தொடும்போது இதயத்திலிருந்து பொங்கி வழியும் மகிழ்ச்சி அது. நெருக்கம், மென்மை, இரக்கம் இவை மூன்றும் இறைவனின் மனப்பான்மையாகும். மேலும் கிறிஸ்துமஸ் குடிலின் முன் நின்று இத்தகைய மனப்பான்மையை நாமும் பெற செபிப்பதன் வழியாக அன்றாட வாழ்வில் இறைவன் நமக்கு உதவுவதை நாம்  உணர முடியும்.

அன்பான சகோதர சகோதரிகளே கிறிஸ்து பிறப்பு குடில் காட்சியானது ஒரு சிறிய கிணறு போன்றது, அதில் இருந்து கடவுளின் நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரத்தைப் பெற முடியும். இது ஒரு வாழும் நற்செய்தி. திருவிவிலியத்தில் உள்ள கிணற்றைப் போல கிறிஸ்துவை சந்திக்கும் இடமாகவும்  பெத்லகேமின் மேய்ப்பர்கள் மற்றும் கிரேச்சோவின் மக்கள் செய்ததைப் போல, வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளையும் கவலைகளையும் இயேசுவிடம் கொண்டு வரக்கூடிய சந்திப்பின் இடமாகவும் விளங்குகின்றது. பிறப்பு காட்சிக்கு முன்னால் நமக்குப் மிகவும் பிரியமானதை இயேசுவிடம் ஒப்படைத்தால், நாமும் மட்டில்லா பெருமகிழ்ச்சி அடைவோம். (மத் 2:10).  இத்தகைய மகிழ்ச்சியானது  தூய ஆவியின் ஆச்சர்யமூட்டும் ஆற்றல் வழியாக நம்மில் நிறையட்டும் இதன் வழியாக இறைவனின் மறைபொருளை நம் வாழ்வில் காண முயல்வோம்.  கிறிஸ்துமஸ் குடிலின் முன்  நிற்போம். நம் இதயத்தை அவரிடம் கையளித்து அதன்படி உணர்ந்து வாழ்வோம்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை அவர்கள்,கடந்த திங்கட்கிழமை சீனாவின் கன்சு மற்றும் ஷங்காயில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்காக செபித்தார். துன்புறும் மக்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தையும் செபத்தையும் வெளிப்படுத்தி அவர்கள் உடன் இருப்பதாகக் கூறினார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களின் செயலை ஊக்குவிப்பதாகவும், துன்புறும் மக்கள் அனைவருக்கும் இறைவன் ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்க செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் ஆப்ரிக்காவில் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வரும் ஏழை மக்களைக் காப்பாற்ற கடலுக்குச் செல்லும் மத்தியதரைக் கடல் (saving humans ) மனிதர்களைக் காப்பாற்றும் குழுவை தான் வாழ்த்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அவர்கள் நன்றாக வேலை செய்கிறார்கள் அதிகமான மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறார்கள் என்றும் கூறினார்.

போரின் தீமையால் பாதிக்கப்பட்ட மக்களை மறந்துவிடக் கூடாது என்றும் எப்போதும் தோல்வியைத்தரும் போர் நிறுத்தப்பட வேண்டும் போரினால் ஆயுதம் உற்பத்தி செய்பவர்கள் மட்டுமே பொருளீட்டுகின்றார்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலஸ்தீனம்,  இஸ்ரயேல், உக்ரைன் பற்றி சிந்திப்போம் என்று கூறிய திருத்தந்தை உக்ரைன் தூதர் இங்கே இருக்கிறார் என்றும், துன்புறுத்தப்பட்ட உக்ரைன், மிகவும் பாதிக்கப்படுகிறது, போரினால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி சிந்திப்போம் கிறிஸ்துமஸ் குடில் முன் நின்று இயேசுவிடம் அமைதியைக் கேட்போம். ஏனெனில் அவரே அமைதியின் இளவரசர் என்று கூறினார் திருத்தந்தை

இறுதியாக கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2023, 09:27