ҽ

கிறிஸ்தவ சான்று வாழ்வு மனமாற்றத்திற்கு வழிகாட்டுகிறது!

நற்செய்திக்கு, உறுதியுடனும், மனத்தாழ்மையுடனும், நம்பிக்கையுடனும் சான்று பகிர்வதில் நம்முடைய சொந்த உறுதிப்பாட்டை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும் : திருத்தந்தை பிரான்ஸ்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இன்றும் விசுவாசத்திற்காகத் துயருற்று இறக்கும் உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளைப் பற்றி நாம் எந்தளவுக்கு அக்கறை கொள்கிறோம் என்பது குறித்தும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 26, இச்செவ்வாயன்று, திருஅவையின் முதல் மறைச்சாட்சி புனித ஸ்தேவானின் திருநாள் சிறப்பிக்கப்பட்ட வேளை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்குச் சிறப்பு மூவேளை செபவுரை வழங்கியபோது இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நற்செய்திக்கு, உறுதியுடனும், மனத்தாழ்மையுடனும், நம்பிக்கையுடனும் சான்று பகிர்வதில்  நம்முடைய சொந்த உறுதிப்பாட்டை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தனது உரையில் புனித ஸ்தேவானின் வீர சாட்சியத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரின் சாட்சிய வாழ்வு மற்றவர்களுக்கு நம்பிக்கையின் விதையை விதைத்தது, இதயங்களை மாற்றியது மற்றும் விசுவாசத்தின் அற்புதங்களைச் செய்தது என்றும் எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து புனித ஸ்தேவானின் துணிவுமிகு சாட்சிய வாழ்வைக் குறித்து விளக்கிய திருத்தந்தை, அவரின் நேர்மை, ஏழைகளுக்கு ஆற்றிய அர்ப்பணம் நிறைந்த பணி,  சவுல் தலைமையில் அவரைத் துன்புறுத்தியவர்களால் அவர் இரக்கமின்றி கல்லெறிந்து கொல்லப்பட்டபோதும் இயேசுவுக்கு சாட்சியம் அளித்த துணிவுமிகு வீரம் ஆகியவற்றை நினைவுகூர்ந்தார்.

துன்புறுத்தியவரான சவுல் துன்புறுத்தப்பட்டவரான ஸ்தேவான் இருவரும் இருவேறு சூழல்களில் வேறுபட்டிருந்தனர் என்று கூறிய திருத்தந்தை, பரிசேயரான சவுலின் கடுமையான போக்கால், கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருந்த துணிவுமிக்க கிறிஸ்தவரான ஸ்தேவானுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும்கூட, இந்த இருவேறு தோற்றத்திற்குப் பின்னால், இருவருக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பு உள்ளது, ஏனெனில் ஸ்தேவானின் மறைசாட்சியம் வழியாக, ஆண்டவராகிய இயேசு, சவுலுக்கு மனமாற்றத்தைக் கொடுத்து அவரை மிகப்பெரும் திருத்தூதராக மாற்றும் திட்டத்தைக் கொண்டிருந்தார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

ஸ்தேவான் ஒரு மறைசாட்சியாக, தனது இன்னுயிரை இறுதியில் கையளிக்கும் அதேவேளையில், அவரது வேண்டல்கள், நம்பிக்கை, மற்றும் குறிப்பாக, அவர் இறக்கும்போது வழங்கும் மன்னிப்பு யாவும் மறைவான வழியில் நம்பிக்கைக்கான விதையை சவுலின் வாழ்வில் விதைத்ததுடன், அதுவே இறுதியில் அவரின் கல்லான இதயத்தை அகற்றிவிட்டு சதையாலான  இதயமாக  மாற்றியது என்றும் விளக்கினார் திருத்தந்தை.

இறைவிசுவாசத்திற்கான இவ்விருவரும் ஈந்த தியாகங்களின் விதை தொடக்கத்தில் மடிந்துவிட்டதாகத் தோன்றிடினும், பின்னாளில் அது முளைத்து விருச்சமாகி பலனைத் தருகிறது, ஏனென்றால் கடவுள் அவர்கள் வழியாக அற்புதங்களைச் செய்து, இதயங்களை மனமாற்றி அனைத்து ஆண்களையும் பெண்களையும் காப்பாற்றுகிறார் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2023, 13:41