ҽ

அமைதிக்கான பாதைகளை நோக்கிச் செல்லுங்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்து பிறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நமது செயல்பாடுகள் அமைதிக்கான பாதைகளைத் திறப்பதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தட்டும் என்றும், போர் என்பது வன்முறை அதனால் தான் கடவுள், உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார் வில்லை ஒடிக்கின்றார் ஈட்டியை முறிக்கின்றார் என்ற திருப்பாடல் வரிகளையும் மேற்கோள்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜெண்டினாவின் புதிய அருளாளர் கர்தினால் பிரோனியோ, கொலம்பியா பகுதி புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் துன்பங்கள், போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்படும் மக்கள் என அனைவர் பற்றியும் நினைவுகூர்ந்தார்.

புதிய அருளாளர் பிரோனியோ

டிசம்பர் 16 சனிக்கிழமை அர்ஜெண்டினாவில் உள்ள தூய லூஜான் அன்னை திருத்தலத்தில் அருளாளராக உயர்த்தப்பட்ட கர்தினால் எதுவார்தோ பிரோனியா அவர்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்ச்சியுள்ள மனிதர், நம்பிக்கையின் சான்றாக திகழ்ந்தவர், ஏழைகளின் பாதுகாவலர் என்றும் அவரைக் குறித்துக் கூறினார்.

புதிய அருளாளர் பிரோனியோ அவர்கள், திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களுடன் இணைந்து உலக இளையோர்தினக் கொண்டாட்டங்களுக்காகப் பணியாற்றியவர் என்றும், பலவீனமானவர்களுக்கு உதவுதல், தெருக்களில் இருப்பவர்களுடன் இணைந்து நடத்தல், வெளிப்புறம் நோக்கிப் பயணிக்கும் திருஅவை போன்றவற்றிற்கு புதிய அருளாளரின் வாழ்வு சான்றாக இருக்கட்டும் என்று கூறி கரவொலி எழுப்பி மகழ்வினைத் தெரிவிக்க கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.      

புலம்பெயர்ந்தோர்

கொலம்பியா மற்றும் பனாமாவிற்கு இடையில் உள்ள டேரியன் காட்டைக் கடக்க முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், குழந்தைகளைக் கொண்ட அக்குடும்பங்கள், ஆபத்தான பாதைகளைக் கடந்து செல்கின்றார்கள், பொய் வாக்குறுதியளிப்பவர்களால் ஏமாற்றப்படுகின்றார்கள், கொள்ளையடிக்கப்படுகிறார்கள், உயிரிழக்கின்றார்கள் என்றும் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.

புலம்பெயர்ந்தோரின் இத்தகைய நிலை கவனிக்கப்படவும், மனிதாபிமான பதில்கள் வழங்கப்படவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக உதவும் நாடுகள் பன்னாட்டு சமூகத்தின் உதவியுடன் மனிதாபிமான முயற்சிகளை செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.  

உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் மற்றும் போர் மோதல்களால் பாதிக்கப்படும் பகுதிகளில் வாழும் சகோதர சகோதரிகளை மறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையான போர் நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வன்முறையான போர்

காசா பகுதியில் அன்னை தெரசா சபை அருள்சகோதரிகள், எளிய மக்கள் என திருக்குடும்ப பங்குத்தளத்தில் இருந்த அப்பாவி மக்கள் மீது குண்டுவீச்சு, துப்பாக்குச்சூடு நடத்தப்படுவது வேதனையளிக்கின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்தவர்கள் வன்முறையாளர்கள் அல்ல மாறாக குடும்பங்கள், குழந்தைகள், நோயாளிகள், ஊனமுற்றவர்கள் என்றும் கூறினார்.   

பாலன் இயேசு திருஉருவம்

கிறிஸ்து பிறப்பு குடிலில் வைக்கப்பட இருக்கும் பாலன் இயேசு திரு உருவத்தை ஆசீர்வதிக்கும் முன் போரினால் துன்புறும் சிறு குழந்தைகளை  நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், போர் நடக்கும் இடங்கள், புலம்பெயர்ந்தோர் முகாம்களில் இருக்கும் குழந்தைகள், மிகவும் வறுமையில் வாடும் குழந்தைகள் அனைவருக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2023, 13:27