ҽ

அமைதி கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை

அமைதி மற்றும் செபத்தின் வழியாக தந்தைக் கடவுளின் வார்த்தையாகிய இயேசுவுக்கு நாம் இடமளித்தால் மட்டுமே வீண்வார்த்தைகள் மற்றும் வெற்றுப்பேச்சுக்களிலிருந்து நாம் நம்மை விடுவிக்க முடியும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதி மற்றும் நிதானம் என்பது வார்த்தைகளில், செயல்பாடுகளில், பயன்படுத்தும் பொருள்களில், ஊடகங்களில், சமூகத்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் நற்பண்புகளோ ஒறுத்தல்களோ அல்ல மாறாக அவை கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத கூறுகள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் திருமுழுக்கு யோவான் பற்றிய நற்செய்தி வரிகள் பற்றி திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.

அமைதி மற்றும் செபத்தின் வழியாக தந்தைக் கடவுளின் வார்த்தையாகிய இயேசுவுக்கு நாம் இடமளித்தால் மட்டுமே வீண்வார்த்தைகள் மற்றும் வெற்றுப்பேச்சுக்களிலிருந்து நாம் நம்மை விடுவிக்க முடியும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பால໾வனம், அங்கு ஒலிக்கும் யோவானின் குரல், அமைதி போன்ற கருத்துக்களை குறித்து மூவேளை செப உரையாற்றினார்.

பால໾வனம்

இஸ்ரயேல் மக்கள் பல பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கடவுளால் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்த இடத்திற்கு அருகில், அதாவது யோர்தான ஆற்றுக்கு அருகில் திருமுழுக்கு யோவான் இறையரசு பற்றியக் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்தார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் குரலைக் கேட்க நாற்பது ஆண்டுகளாக தம் மக்களைப் பாலைவனத்தில் வழிநடத்தி அனைத்தையும் கற்பித்த அந்த இடத்திற்கு நாம் திரும்ப வேண்டும் என்பதை திருமுழுக்கு யோவான் அடையாளப்படுத்துகின்றார் என்றும் கூறினார்.  

அமைதியான இடம் ஒருவரது வாழ்க்கையில் முக்கிமான இடத்தினை பெறுகின்ற போது, பயனற்ற செயல்கள் மற்றும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது தவிர்க்கப்படுகின்றது என்றும், அதற்கு மாறாக அவரது வாழ்க்கையில் மிகவும் அடிப்படையானவற்றிற்கு முக்கிய இடம் கொடுத்து வாழவும்,  அதிக கவனம் செலுத்தவும் வலியுறுத்தப்படுகின்றார் என்றும் கூறினார்.

நமது வாழ்க்கைப் பயணத்தில் நாம் தொடர்ந்து பயணிக்க தேவையற்றவைகளைக் களைந்து, நன்மையானவற்றால் நம்மை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நன்றாக வாழ்வது என்பது பயனற்ற விடயங்களில் தன்னை நிரப்புவது அல்ல, மாறாக மிதமிஞ்சியவற்றிலிருந்து தன்னை விடுவித்து, தனக்குள்ளேயே ஆழமாக தன்னைக் கண்டறிவது என்றும் கூறினார்.

கடவுளுக்கு முன்பாக உண்மையிலேயே முக்கியமானவற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அமைதி மற்றும் செபத்தின் வழியாக  இறைத்தந்தையின் வார்த்தையாம் இயேசுவுக்கு இடம் கொடுத்து வாழவும், அதனால் வீண் வார்த்தைகள் மற்றும் வெற்றுப் பேச்சுக்களின்  தீமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளமுடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.  

குரல்

நாம் நினைப்பதை வெளிப்படுத்துகின்ற மற்றும் நம் இதயத்தில் இருக்கின்றவற்றை வெளிப்படுத்தும் கருவியாக குரல் இருக்கின்றது என்றும்,  அது அதிகமாக அமைதியுடன் தொடர்புடையது, நமது முதிர்ச்சியை வெளிப்படுத்துவது தூய ஆவியின் குரலுக்கு செவிமடுப்பது என்றும் கூறினார் திருத்தந்தை.

அமைதி

அமைதியாக இருப்பது எப்படி என்று தெரியாவிட்டால், நல்லவற்றை எடுத்துச்சொல்வது கடினம் என்றும், எந்த அளவுக்கு அமைதியாக அதிக கவனத்துடன் இருக்கின்றோமோ அப்போது அந்த அளவுக்கு நமது வார்த்தை அதிக வலிமையாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமுழுக்கு யோவானின்  குரல் அவரது அனுபவத்தின் உண்மைத்தன்மை மற்றும் அவரது இதயத்தின் தெளிவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நமது வாழ் நாள்களி அமைதி எந்த இடத்தில் உள்ளது? அமைதி என்பது வெறுமையா? அடக்குமுறையா? செவிசாய்க்கும் இடமா? நமது இதயத்தைப் பாதுகாக்கும் இடமா? என்று நம்மை நாம் கேள்விக்குட்படுத்த அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2023, 13:37