ҽ

இதயம் என்னும் இல்லத்தைத் தயார் செய்வோம்

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ஞாயிறு மூவேளை செப உரையினை சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இறைவனை உண்மையாக அன்பு செய்யும் பணியாளர்கள் அவரது வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள் என்றும், அவரை நல்ல முறையில் வரவேற்று அவர் விரும்பும் முறையில் தங்களது இல்லத்தை நேர்த்தியாக வைத்திருந்து தலைவரை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவர்களின் அறிவுரையின்படி ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையைப் போலவே, டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை திருவருகைக்காலத்தின் இம்முதல் வாரமும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து தனது மூவேளை செப உரையினை திருப்பயணிகளுக்கு வழங்கினார். திருப்பீடச் செயலகத்தின் அலுவலகத் தலைவர் பேரருள்தந்தை Paolo Braida அவர்கள், திருத்தந்தை அருகில் அமர்ந்து கருத்துக்களை வாசித்தளித்தார்.

மாற்கு நற்செய்தியின் 13 ; 33-37 வரையுள்ள மானிடமகன் வரும் நாளும் வேளையும் என்ற தலைப்பின்கீழ் உள்ள இறைவார்த்தைகளை முன்னிலைப்படுத்தி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைவனுக்காகக் காத்திருக்கும் பணியாளர் பயத்தினால் அல்ல மாறாக உண்மையான அன்பினால் விருப்பத்தினால் காத்திருக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.  

எளிய மக்களின் குரலுக்கு செவிமடுத்தல், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல், நமது நேரத்தை அவர்களுக்காக அளித்தல் போன்றவற்றைச் செய்யும்போது இயேசுவுக்கே நாம் செய்கின்றோம் அவரையே நாம் சந்திக்கின்றோம் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், மன்னிப்பு, இறைவார்த்தை, திருப்பலி, செபநேரம், தேவையிலிருப்பவர்களுக்கு உதவுதல் போன்றவற்றின் வழியாக நம் இதயத்தை தயார் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.      

மேற்பார்வையாளராக தனது உடைமைகளுக்கு ஒரு பணியாளரை தலைவர் அமர்த்துவது என்பது தண்டனை வழங்கப்படுவதற்கான ஓர் செயல் அணுகுமுறை என்று நினைப்பது கிறிஸ்தவர்களுக்கான காத்திருப்பு அல்ல என்றும், வானத்திலிருந்து விழும் விண்கல்லை சரியான நேரத்தில் தவிர்க்காவிட்டால் நம்மை மூழ்கடித்துவிடும் என்ற பயத்துடனே வாழ்வதல்ல என்றும் கூறினார் திருத்தந்தை.

நற்செய்தியில் குறிப்பிடப்படும் பணியாளர் நம்பிக்கையுள்ள பணியாளர் என்று அழைக்கப்படுகின்றார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், ஒன்றிணைந்து செயல்படுதல், உண்மையான அன்பு போன்றவற்றை தலைவரிடத்தில் கொண்டவராக  அப்பணியாளர் இருக்கின்றார் என்றும் கூறினார்.

எண்ணிக்கை நூலில் இறைவன் மோசேயை எனது அடியான் என்று கூறுகின்றார் நற்செய்தியின் மரியா தன்னை ஆண்டவரின் அடிமை என்று கூறுகின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பணியாளர்களின் இத்தகைய மனநிலை பயத்தினால் அல்ல மாறாக விருப்பத்தினால் உண்டாகி இறைவனுக்காகக் காத்திருக்க வைக்கின்றது என்றும் கூறினார்.  

அன்பு  நிறைந்த எதிர்பார்ப்புடன்தான் நாமும் இயேசுவை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும், நற்கருணை, இறைவார்த்தை, உடன் வாழும் சகோதர சகோதரிகள் குறிப்பாக மிகவும் தேவையிலிருப்பவர்கள் வழியாக இறைவன் நம்மைச் சந்திக்க வருகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விழிப்புடன் இருப்பது என்பது இதயத்தை தயாராக வைத்திருப்பது என்றும், நேர்த்தி மற்றும் விருந்தோம்பல் மனதுடன் தலைவராகிய இறைவனது வருகைக்காக நாம் ஆவலுடன் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.  

நம் ஒளியாகிய இறைவனை செபத்துடன் வரவேற்பதும், இரக்கச்செயல்கள் வழியாக அவருக்கு விருந்தோம்பல் அளிப்பதும் அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுச் செயல்பாடுகள், இவை இரண்டும் இறைவனை எளிதாக வெளிப்படுத்தும் இரண்டு முன்னேற்பாடுகள் என்றும் கூறினார் திருத்தந்தை.

தூர்ஸ் நகர மார்ட்டீன் தனது உடையில் ஒரு பகுதியை ஏழை ஒருவருக்கு அளித்த பிறகு இயேசுவே அவ்வுடைகளை அணிந்திருப்பது போல கனவுகண்டார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தேவையில் இருக்கும் சகோதர சகோதரிகளில் இயேசுவைக் கண்டு, சந்தித்து அவர்களுடன் நமது நேரத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விழிப்பு, ஆவல், எதிர்பார்ப்பு, மற்றும் பொறுமை கொண்ட இதயத்துடன் இறைவனது வருகைக்காகக் காத்திருப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் இறைமகனைப் பெற்றெடுக்கக் காத்திருக்கும் அன்னை மரியா அதற்கு உதவுவாராக என்று கூறி தனது மூவேளை செப உரைக் கருத்துக்களை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2023, 13:53