ҽ

உலகளாவிய மனித உரிமைகள் தினம்

75 ஆண்டுகளுக்கு முன்பு, 10 டிசம்பர் 1948 அன்று, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் கையெழுத்தானது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஒரு போதும் முடிவடையவில்லை என்றும், மனித உரிமைகளுக்காக தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் போராடும் அனைவரோடும் தான் உடன் இருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், 75 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் கையெழுத்தானது என்றும் எடுத்துரைத்தார்.

இப்பிரகடனம் ஒரு பெரிய பாதையாக பல முன்முயற்சிகள் மற்றும் செயல்களுக்கான வழியாக அமைந்தது என்றும், மனித உரிமைகளுக்கான செயல்பாடுகளில் பல படிகள் முன்னோக்கி வைக்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் நாம் பின்னோக்கி செல்கிறோம் என்றும் கூறினார்.

மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஒருபோதும் முடிவடையவில்லை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தங்களது அன்றாட வாழ்வில், தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் போராடி, மனித உரிமைகளைப் பாதுகாக்க உழைக்கும் மக்கள் அனைவருடனும் தான் உடன் இருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

மேலும் ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் கைதிகள் விடுதலை பெற்றது குறித்து தான் மகிழ்வடைவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான இந்த உறவுகள், தெற்கு கௌகாசில் அமைதிக்கான நேர்மறையான அடையாளத்தை வழங்குவதாக தான் மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதாகவும் எடுத்துரைத்தார்.

அமைதிக்கான ஒப்பந்தத்தில் முடிவுகளை எடுக்க நாட்டின் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் தான் ஊக்கிவிப்பதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   துபாயில் நடைபெற்று வரும் COP 28 காலநிலை மாநாடு இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருப்பது பற்றியும் திருப்பயணிகளுக்கு நினைவூட்டினார்.

நாம் வாழும் பொதுவான இல்லமாகிய இப்பூமிப் பந்தின் பராமரிப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு நல்ல முடிவுகள் இக்கூட்டத்தால் எடுக்கப்பட செபிக்க வேண்டும் என்றும் திருப்பணிகளிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து செபிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம் கடவுளின் உதவியால் அமைதியை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஏனெனில் சில மோதல்கள் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அமைதியான சகவாழ்வுக்காக விவேகம் மற்றும் பொறுமையுடன் உழைத்த ஆண்களும் பெண்களும் சான்றாக நம் மத்தியில் இருக்கின்றன என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2023, 14:24