ҽ

கிறிஸ்து பிறப்பிற்கு நம் இதயங்களைத் தயார் செய்வோம்

டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை தனது 87ஆவது பிறந்த நாளை வத்திக்கான் மருந்தகத்தில் சிகிச்சை பெறும் குழந்தைகளோடு இணைந்து சிறப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்து பிறப்பு என்னும் ஒரு பெரிய கொண்டாட்டத்திற்காக  நாம் தயாராக வேண்டும் என்றும், நமக்காக, நம்மைத் தேடி வந்த இயேசு நம்மோடு இருக்க வருகின்றார் எனவே அவருக்காக நமது இதயத்தை தயார் செய்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை தனது 87ஆவது பிறந்த நாளை வத்திக்கான் மருந்தகத்தில் சிகிச்சை பெறும் குழந்தைகளோடு இணைந்து சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆறாம் பவுல் அரங்கத்தில் அச்சிறார் நடத்திய பாடல்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக நன்றி கூறி மகிழ்ந்தார்.

நன்றி என்பது இதயத்தின் நினைவு என்ற வார்த்தைகள் திருத்தந்தையின் 87ஆவது பிறந்த நாள்  கேக்கில் (இனிப்பு ) எழுதப்பட்டிருந்தது. வத்திக்கான் தூய சாந்தா மார்த்த சிறார்பிரிவு மருந்தகத்தில் சிகிச்சைபெறும் ஏறக்குறைய 200 குடும்பங்களை சார்ந்த சிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பாடல்கள் நடனங்கள் வழியாக தங்களது வாழ்த்துக்களை எடுத்துரைத்தனர்.

1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் நாள் அர்ஜெண்டீனாவின் நாட்டு புவனோஸ் அய்ரேசில் பிறந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 13ம் தேதி தனது அருள்பணித்துவ திருநிலைப்பாட்டு ஆண்டையும் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

87ஆவது பிறந்த நாளினை சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கர்தினால்கள், தலத்திருஅவை ஆயர்கள், திருப்பீடத்துறை தலைவர்கள், அதிகாரிகள், அலுவலகர்கள், நாட்டின் தலைவர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்வையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2023, 12:33