ҽ

உண்மைக் கடவுளாகிய இயேசுவில் நம் கண்களைப் பதிப்போம்!

இயேசு, சாதனையின் கடவுள் அல்ல, மாறாக, மனுவுருவெடுத்தலின் கடவுள் : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 24, இஞ்ஞாயிறு இரவு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை.  

கடவுள் நம் வாழ்க்கையை அரவணைத்துக்கொள்ள பெரிதும் விரும்புகிறார், அவர் எல்லையற்றவராக இருப்பினும், நமக்காக எல்லைக்குட்பட்டவராக மாறுகிறார், அவரது மகத்துவத்தில், அவர் எளிமையைத் தேர்வுசெய்கின்றார், அவருடைய நீதியில், அவர் நம்முடைய அநீதிக்கு அடிபணிகிறார். இதுதான் கிறிஸ்து பிறப்பு விழா தரும் வியப்புக்குரிய செய்தி.

அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்த வேளை, கடவுள் ஏறத்தாழ மறைமுகமாக அதில் நுழைகிறார். ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் வரலாற்றின் வலிமைவாய்ந்தவர்களுடன் இணைந்து தங்கள் இடத்தைப் பிடிக்க முற்படும்போது, வரலாற்றின் அரசராகிய கடவுள் அதில் எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறார்.

மேலும் வலிமைவாய்ந்தவர்கள் யாரும் கடவுளை கண்டுகொள்ளாதபோது, சமூக வாழ்க்கையின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட இடையர்கள் மட்டுமே வரலாற்றின் அரசராகிய இந்தக் குழந்தை இயேசுவைக்  கண்டுகொள்கின்றனர்.

மனுவுருவெடுத்தலின் கடவுள்

பேரரசர் அகுஸ்து சீசரின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, இவ்வுலகின் அதிகாரத்திற்கான தாகம் மற்றும் வலிமை, புகழ் மற்றும் பெருமைக்கான தேடுதல். இது வெற்றி, முடிவுகள், எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்தையும் அளவிடுகிறது. மேலும் இது சாதனையின் வெறித்தனத்தைக் காட்டவிரும்பும் உலகியல் மதிப்பீடுகளைக் கொண்டது. இருப்பினும், இந்த அணுகுமுறைக்கு ஒரு மாற்று உள்ளது. இயேசு, சாதனையின் கடவுள் அல்ல, மாறாக, மனுவுருவெடுத்தலின் கடவுள் என்பதே அதன் மாற்று.

இயேசு, தனது அதிகாரத்தை மேலிருந்து வெளிப்படுத்துவதன் வழியாக அநீதியை அகற்றவிரும்பவில்லை. மாறாக, கீழிருந்து அதாவது, இம்மண்ணுலகில் நம்மில் ஒருவராக வாழ்ந்து தனது அன்பை வெளிப்படுத்தியதன் வழியாக அநீதியை அகற்ற விரும்பினார். இயேசு, தனது எல்லையற்ற வலிமையின் வழியாக அல்ல, ஆனால், இடுக்கண் வழியாக நம் வாழ்வின் குறுகிய எல்லைக்குள் மனுவுருவெடுக்கின்றார்.

மகத்துவதில் எளிய வடிவம்

ஆகவே, இந்த உயிருள்ள மற்றும் உண்மையான கடவுள் மீது நம் கண்களை நிலைநிறுத்துவோம். இம்மானுட வரலாற்றின் ஒரு பகுதியாக மாறுவதன் வழியாக அவ்வரலாற்றில் புரட்சி ஏற்படுத்தும் கடவுள், அவரை நிராகரிக்க அனுமதிக்கும் அளவுக்கு நம்மை மதிக்கும் கடவுள், பாவத்தை தன் மீது சுமந்து கொண்டு அதை நீக்குபவரானார்.

ஆகவே, அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே, வானதூதர் நமக்கு அடையாளமாகத் தந்துள்ள மாட்டுத்தொழுவத்தையும், குடிலையும் அதில் பிறந்துள்ள குழந்தை இயேவையும் (காண்க. லூக்கா 2:12) பற்றி ஆழ்ந்து தியானிப்போம். ஏனென்றால் அது உண்மையிலேயே கடவுளின் முகத்தை வெளிப்படுத்தும் ஓர் அடையாளம், அது பரிவிரக்கம் கொண்ட ஒரு முகம், அதன் வலிமை எப்போதும் அன்பில் மட்டுமே வெளிப்படுகிறது.

‘வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்’ (காண்க யோவா 1:14) என்ற இறைவார்த்தை, கடவுள் நமக்காக முழுவதுமாக நம்மில் ஒருவரானார் என்பதையே காட்டுகிறது. கடவுள் ஏன் இந்த அளவிற்குத் தன்னையே தாழ்த்திக்கொண்டார் என்றால், அவர் நம்மீது மிகுந்த அக்கறை காட்டுகிறார், அவர் நம்மிடம் அன்புகூர்வதால், எல்லாவற்றையும் விட அவர் நம்மை விலைமதிப்பற்றவர்களாகக் கருதுகிறார்.

குழந்தை இயேசுவை வணங்குவோம்

வழிபடுவது என்பது மனுவுருவெடுத்தலை அரவணைத்துக்கொள்வதற்கான  சிறந்ததொரு வழியாக அமைகின்றது. ஏனென்றால், அமைதியில்தான் தந்தையின் வார்த்தையாகிய இயேசு நம் வாழ்வில் மனுவுருவெடுக்கிறார். ஆகவே, வானக உணவின் இல்லமாக அமைந்துள்ள பெத்லேகேமில் இடையர்களும், ஞானியர் மூவரும் செய்தது போல நாமும் குழந்தை இயேசுவை வழிபடுவோம்.

இப்போது வாழ்வு தரும் உணவாகிய இயேசுவின் முன் நிற்போம். வழிபாடு என்பது நேரத்தை வீணடிப்பதற்காக அல்ல, மாறாக, நமது நேரத்தை கடவுளின் தங்குமிடமாக மாற்றுவதற்காக என்ற உண்மையை உணர்ந்தவர்களாக, வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

இந்த வழிபாடு என்பது, மனுவுருவெடுத்தலின் விதையை நமக்குள் பூக்க வைக்க உதவுகிறது, புளித்த மாவைப் போல உலகையே மாற்றும் இறைவனின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தூண்டுகிறது, பரிந்துரைப்பதற்கும், பரிகாரம் செய்வதற்கும், வரலாற்றை மறுசீரமைக்க கடவுளை அனுமதிப்பதற்கும் வழிகாட்டுகிறது.

புனித பூமிக்காக இறைவேண்டல்

இப்போது நமது இதயங்கள் அனைத்தும் பெத்லகேமில் உள்ளன. அங்கு அமைதியின் இளவரசராகிய இயேசு, போரின் பயனற்ற தர்க்கத்தால் மீண்டும் நிராகரிக்கப்படுகிறார். இது ஆயுத மோதலால் இன்றும் அவருக்கு உலகில் இடம் கிடைப்பதைத் தடுக்கிறது  என்பதை உணர்ந்துகொள்வோம். ஆனால் அதேவேளையில், இந்த இரவு கடவுளின் பேரன்பு இவ்வுலகின் வரலாற்றையே மாற்றப் போகிறது என்பதைக் காட்டவிருக்கிறது.

இயேசுவே, உலகம் தரும் வலிமையிலிருந்து வேறுபட்டு உமது அன்பின் வல்லமையில் எங்களை நம்பிக்கைகொள்ளச் செய்வீராக! அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள்  மற்றும் ஞானிகள் போன்று எங்கள் அனைவரையும் உமது குடிலை சுற்றி ஒன்றுசேர்ந்து உம்மை வழிபடச் செய்வீராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 December 2023, 13:32