ҽ

கிறிஸ்துமஸ் இன்னிசைக் கச்சேரி பாடகர்கள் கிறிஸ்துமஸ் இன்னிசைக் கச்சேரி பாடகர்கள்  (ANSA)

கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியான கிறிஸ்துமஸ் பாடல்கள்

கிறிஸ்துமஸ் கால பாடல்கள் அனைத்தும் எளிமை, இறையியல், மற்றும் நல்லிணக்கத்தின் தலைசிறந்த படைப்பு

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்துமஸ் காலத்தில் பாடப்படும் பாரம்பரியமான பாடல்கள் அனைத்தும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், மனிதர்கள் தங்களது கதைகளையும் செபங்களையும் பாடல்கள் வடிவத்தில் இவ்வுலகிற்கு வழங்கி இருக்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 16 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் கிறிஸ்துமஸ் இன்னிசைக் கச்சேரியில் பங்கேற்பவர்கள் ஏறக்குறைய 135 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களுக்குப் பிடித்த பாடகர்களின் பாடல்களை இளையோர் மனனம் செய்வது, அப்பாடலின் வரிகள், உணர்வுகள் மற்றும் அர்த்தங்களின் கலவையை அவர்களுக்குள் எழுப்புவதனாலேயே என்றும் கூறினார்.

கிறிஸ்துமஸ் கால பாடல்கள் அனைத்தும் எளிமை, இறையியல், மற்றும் நல்லிணக்கத்தின்  தலைசிறந்த படைப்பு என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கலை வேறுபட்டது, கிறிஸ்து பிறப்பு பாடல்கள் அனைத்தும் இதயத்திலிருந்து வரும் கலையுணர்வுடன் பாடப்பட வேண்டும் என்றும், கவிதையையும், தன்னிச்சையாக எழும் உணர்வுடன் பாடப்படுவதையும் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.  

கிறிஸ்தவ பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பாடகர்களும் இருக்கின்றார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உலகெங்கிலும் உள்ள பாடகர்கள் ஒவ்வொருவரும் தத்தமது மொழியில் தங்களது சொந்த குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்து, முத்திரையைப் பதித்து, தாங்கள் வாழ்கின்ற பகுதியின் கலாச்சாரத்தினை மொழிகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்து பிறப்பு நற்செய்தியானது தனித்துவமானது அதை ஒரே மாதிரியாக பாட முடியாது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மாறி வரும் தொழில் நுட்பத்தால் ஒரே மாதிரியாக தரப்படுத்தப்பட்டு மாறிக்கொண்டிருக்கும் நிலை அறிந்து கவனத்துடன், அவரவர் பெற்ற கொடை, கலைத்திறன் மற்றும் ஆன்மிக உணர்வுடன் நீங்கள் நீங்களாக இருங்கள் தனித்துவமாக இருங்கள் என்றும் கூறினார்.

போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்படும் மக்களை குறித்தும் பாடல்கள் பாட உள்ளதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள்,இயேசு பிறந்த புனித பூமியில் துன்புறும் மக்களை நினைத்து அவர்களுக்காகப் பாடி செபிக்கவும் அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2023, 12:59