ҽ

வாழும் கிறிஸ்து பிறப்புக் காட்சியின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ். வாழும் கிறிஸ்து பிறப்புக் காட்சியின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்.   (ANSA)

கடவுள் குழந்தையாக மாறிய மறைபொருளை வெளிப்படுத்தும் காட்சி

கடவுள் மனிதராக, அன்னை மரியிடத்தில், மாட்டுத்தொழுவத்தில், தீவனத்தொட்டியில், எளிய மனிதராகப் பிறந்தார் என்ற மறைபொருளை வெளிப்படுத்த முதல் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழும் கிறிஸ்து பிறப்புக் காட்சியின் நோக்கமானது கடவுள் குழந்தையாக மாறியதன் மறைபொருளை மனித இதயங்களில் மீண்டும் எழுப்புவதாக இருக்க வேண்டும் என்றும், புனித பூமியில் துன்புறும் அனைவரையும் நினைவுகூர்வதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 16 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில், உரோம் தூய மேரி மேஜர் பெருங்கோவில் மற்றும் கிறிஸ்துமஸ் குடில் இயக்கத்தாரால் இணைந்து நடத்தப்படும் வாழும் கிறிஸ்துமஸ் குடில் நிகழ்ச்சியினை வழங்குபவர்கள் அதன் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என ஏறக்குறைய 2500 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

800 ஆண்டுகளுக்கு முன்பாக கிரேச்சோ மலைப்பகுதியில் புனித பிரான்சிஸ் அசிசியார் முதன் முதலில் கிறிஸ்து பிறப்பு குடிலை உருவாக்கியது துறவறத்தார் மற்றும் பொது மக்களிடத்தில், கடவுள் மனிதராக, அன்னை மரியிடத்தில், மாட்டுத்தொழுவத்தில், தீவனத்தொட்டியில், எளிய மனிதராகப் பிறந்தார் என்ற மறைபொருளை வெளிப்படுத்தவும், அத்தகைய உணர்வை, மென்மையினை அவர்கள் உள்ளத்தில் தூண்டுவதற்காகவுமே உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.

தூய அசிசியார் ஓர் ஓவியத்தையோ சிலையையோ அல்ல மாறாக உயிருள்ள மனிதர்களைக் கொண்டு கடவுள் மனிதராகப் பிறந்ததை மனித உள்ளங்களில் வெளிப்படுத்த எண்ணிணார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து பிறப்பு குடில் நமது இதயத்தை மீண்டும் எழும்பச்செய்ய வேண்டும் புனித பூமியை நினைவுகூரவேண்டும் என்னும் இரண்டு கருத்துக்களை வலியுறுத்தினார்.

புனித பூமிக்காக செபிப்போம்

இயேசு பிறந்து வாழ்ந்து, இறந்து, உயிர்த்த, புனித பூமியானது போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போர் மற்றும் மோதல்களினால், துன்புறும் மக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட, ஒற்றுமையாக வாழ, அவர்களுக்காக செபிப்போம் என்றும் கூறினார்.

திருப்பயணிகள் மற்றும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டங்கள் இல்லாத, வலி மற்றும் துன்பத்தால் நிறைந்த, அம்மக்களுக்கு செபம் மற்றும் உறுதியான உதவிகளுடன் உடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழும் கிறிஸ்து பிறப்பு குடிலை காட்சிப்படுத்துபவர்கள் அனைவரும் தங்களது நடிப்பால் துன்புறும் பெத்லகேமை, மத்திய கிழக்கு மற்றும் முழு உலகிற்கும் அடையாளப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் போது புனித பூமியை  நினைவுகூர்வோம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ அவர்களை வாழ்த்தி, நற்செய்திக்கு சான்றுபகரக்கூடிய வாழ்க்கை வாழவும் கேட்டுக்கொண்டு அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைக் கூறினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2023, 10:38