ҽ

படைப்பு என்பது வரவேற்கப்படவேண்டிய கொடை

சந்திப்பு என்பது நமது வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தில் சகோதர சகோதரிகளாகவும், நம்பிக்கையாளர்களாகவும் இருக்க அழைக்கின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

படைப்பு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் அமைப்பு மட்டுமல்ல, வரவேற்கப்பட வேண்டிய கொடை என்றும், சிந்தனையில் ஏழ்மையான ஓர் உலகம் ஆன்மாவில் மாசுபட்ட உலகமாக, மக்களை அப்புறப்படுத்தி கழிவுகளை உற்பத்தி செய்கின்ற உலகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் Faith Pavilion எனப்படும் நம்பிக்கையின் காட்சிக்கூடத் திறப்புவிழாவிற்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மதநம்பிக்கையும் சந்திப்பு மற்றும் செயலுக்கான ஆதாரமாக இருப்பதை COP கூட்டமானது வெளிக்காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் கருத்துக்களை திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்  அவர்கள் நம்பிக்கையின் காட்சிக்கூடத்திறப்பு விழாவின்போது  அக்கூட்டத்தார்க்கு வாசித்தளித்தார்.  

சந்திப்பிற்கானக் கூடம்

சந்திப்பு என்பது நமது வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தில் சகோதர சகோதரிகளாகவும், நம்பிக்கையாளர்களாகவும் இருக்க அழைக்கின்றது என்றும், இந்த மண்ணில் திருப்பயணிகளாகக் காத்திருக்கும் நாம் நமது பொதுவான வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நமக்கும் இந்த உலகிற்கும் நினைவூட்டுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த நம்பிக்கை  காட்சிக்கூடமானது மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடும் இடமாகவும்,  மதங்கள் எப்போதும் "விருந்தோம்பல் இடங்களாக" இருக்கட்டும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், செபம் இல்லாத உலகம் பல வார்த்தைகளைக் கூறலாம் ஆனால், இரக்கமும் கண்ணீரும் இன்றி, பணம் மற்றும் ஆயுதங்களால் ஆன பொருள்சார் உலகமாக மட்டுமே வாழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செயல்பாடுகளுக்கானக் கூடாரம்

சுற்றுச்சூழலுக்காக செயல்படுவது மிக அவசரமானது என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், அதிக பொருளாதார வளங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது மாறாக, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்றும், படைப்பு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பு மட்டுமல்ல, வரவேற்கப்பட வேண்டிய பரிசு கொடை என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

அமைதியான சூழல் அமைந்தால் மட்டுமே அனைவரும் வாழக்கூடியதாக வீடு இருக்கும் என்றும், அமைதியைக் காப்பது மதங்களின் பணி, இதில் தயவு செய்து முரண்பாடுகள் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை அவர்கள், உதடுகள் உண்மையைப் பேசட்டும், அமைதியைப் பற்றி பேசுங்கள், வன்முறைக்கு எதிராக தெளிவான நிலைப்பாட்டை எடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

புனித பிரான்சிஸ் அசிசியின் வார்த்தைகளான "உங்கள் வாயால் நீங்கள் அறிவிக்கும் அமைதி, உங்கள் இதயங்களில் இன்னும் அதிகமாக இருக்கட்டும்" என்பதை மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நாம் அனைவரும் ஒன்றாக அமைதியை உருவாக்குபவர்களாகவும், படைப்பின் காவலர்களாகவும் இருக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2023, 13:40