வெஸ்ட் பேங்க் பகுதி திறந்த வெளி சிறைக்கூடமாக மாறி வருகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பாலஸ்தீனிய காசா பகுதி தற்போது ஒரு மிகப்பெரும் இருண்ட காலத்தை அனுபவித்து வருவதாக அங்கு பணிபுரியும் லூத்ரன் கிறிஸ்தவ சபை போதகர் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்முகத்தில் எடுத்தியம்பினார்.
இன்று காசாவில் இடம்பெறுவதைப் பார்க்கும்போது, இதுவே தங்களுக்கும் இடம்பெறுமோ என ஒவ்வொருவரும் அச்சத்தில் வாழ்வதாக எடுத்துரைத்த லூத்ரன் கிறிஸ்தவ போதகர் Munther Isaac அவர்கள், வெஸ்ட் பேங்க் பகுதியில் தொடர்ந்து நிலைமை சீர்கேடடைந்து வருவது, காசா மக்களை வெளியேற்ற அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது, மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதிக்கான திருத்தந்தையின் தொடர்ந்த அழைப்பு போன்றவை குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இஸ்ராயேலிய குடியேற்றங்களும், சாலையோரத் தடுப்புக்களும் வெஸ்ட் பேங்க் பகுதியை தொடர்பற்ற திறந்த வெளி சிறைக்கூடமாக மாற்றி வருவதைக் காணமுடிகிறது என கவலையை வெளியிட்ட கிறிஸ்தவ போதகர் ஐசக் அவர்கள், பெத்லேகமைச் சுற்றி மட்டுமே 80 சாலையோரத் தடுப்புக்கள் இருப்பதாகவும் இவைகளைக் கடந்து செல்ல 6 முதல் 7 மணி நேரம் வீணாவதாகவும் எடுத்துரைத்தார்.
பெத்லேகம் பகுதி பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டுவருவதாக உரைத்த அவர், திருப்பயணிகளை நம்பியிருந்த இப்பகுதி தற்போது வெளிநாட்டுப் பயணிகளே இன்மையால் திருஅவையின் சிறு உதவிகளை நம்பி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காசாவின் மக்கள் ஏற்கனவே புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் குறிப்பிட்ட போதகர் ஐசக், இத்தகைய நிலை அருகாமையில் வாழும் மற்றவர்களுக்கும் ஏற்படும் ஆபத்து உள்ளது என தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்