ҽ

இயேசு சபையினரின் திருப்பயணம் என்ற கணனி பயன்பாட்டு மென்பொருள் இயேசு சபையினரின் திருப்பயணம் என்ற கணனி பயன்பாட்டு மென்பொருள் 

இயேசு சபையின் திருப்பயண பக்கத்தில் ஹிந்தியும் தமிழும் இணைப்பு

நேரடியாக இயேசு சபையினர் தொடர்புடைய இடங்களைச் சென்று காண்பதற்கும், வீட்டில் அமர்ந்துகொண்டே கணனி வழியாக இவ்விடங்களைக் காணவும் உதவும் இயேசு சபையினரின் திருப்பயண இணையப் பக்கம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசு சபையை நிறுவிய புனித இக்னேசியஸ் லொயோலா மற்றும் இயேசு சபையினர் தொடர்புடைய புனித தலங்களைக் கணனியில் கண்டு இரசிப்பதற்கு உதவும் வகையில் இயங்கி வந்த மென்பொருளில் ஹிந்தி மற்றும் தமிழும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

Jesuit Pilgrimage என்ற இணையப் பக்கத்தில் ஏற்கனவே ஆங்கிலம், இஸ்பானியம், பிரெஞ்ச், இத்தாலியம், எளிதாக்கப்பட்ட மற்றும் பாரம்பரிய சைனம், கொரியன், வியட்நாம் என எட்டு மொழிகளில் புனித தலங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஹிந்தி மற்றும் தமிழும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

இயேசு சபையினரின் ஆன்மீக பாரம்பரியம் மேலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள இவ்விரு மொழிகளும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இம்மொழி பேசும் மக்களுக்கும் உதவுவதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு சபையினர் தொடர்புடைய இடங்களை நேரடியாகச் சென்று காண்பதற்கும், வீட்டில் அமர்ந்துகொண்டே கணனி வழியாக இவ்விடங்களைக் காணவும் உதவும் வகையில் ஒலி-ஒளி சேவையை வழங்கும் இந்த இணையப் பக்கம், இவ்விடங்களின் வரலாற்றுப் பின்னணி, அவை வழங்கும் ஆன்மீக சிந்தனைகள், நடைமுறைத் தகவல்கள் போன்றவைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

ஒவ்வொரு புனித இடத்தின் வரலாறு, ஆன்மீக சிந்தனைகள், விளக்கங்கள் என்பவை அவ்விடம் குறித்து நாம் ஆழமாக புரிந்துகொள்ள உதவுவதுடன், ஊடாடும் வரைபடம், தரம் மிகுந்த காட்சிகள் போன்றவையும் ஆழமான திருப்பயண அனுபவத்தை நம்மில் விதைக்க உதவுகின்றன.

இந்த Jesuit Pilgrimage  கணனி பயன்பாட்டு மென்பொருள் இலவசமாக தரவிறக்கம் செய்யப்படும் வகையில் தரப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 பிப்ரவரி 2025, 15:02