ҽ

கிறிஸ்து அனைத்துலகிற்கும் அரசர் கிறிஸ்து அனைத்துலகிற்கும் அரசர்  

கிறிஸ்து அரசர் பெருவிழா : இயேசு எனும் அரசர்வழி செல்வோம்!

உண்மையில், அரசாள்வது என்பது துன்புறும் மக்களுடன் துன்புற்று அவர்களுக்கு விடுதலை வாழ்வை அளிப்பது என்பதை எடுத்துக்காட்டும் ஒப்பற்ற அரசராம் கிறிஸ்துவின் பக்கம் நின்று பணியாற்றுவோம்.
கிறிஸ்து அரசர் பெருவிழா! : இயேசு எனும் அரசர்வழி செல்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I. தானி 7:13-14      II. திவெ    III.  யோவா 18:37-38)

அது ஒரு அடர்ந்த காடு. அக்காட்டின் வழியே ஓர் ஆசிரியர் தனது மாணவர்களுடன் நடந்துபோய்க்கொண்டிருக்கிறார். அவருடைய மாணவர்கள் சிலரும் உடன் செல்கின்றனர். செல்லும் வழியிலேயே அவர்களுக்குப் பல்வேறு காரிங்களைக் குறித்து கற்பித்துக்கொண்டே செல்கிறார் ஆசிரியர். அப்போது சிறிது தொலைவில் கல்லறை ஒன்று தென்படுகிறது. அங்கே ஒரு பெண் நின்று அழுதுகொண்டு இருக்கிறாள். அவள் முகத்தில் பெரும் கவலையைப் பார்க்கமுடிகிறது. உடனே ஆசிரியர் தனது மாணவர்களில் ஒருவரை அழைத்து, "நீ அங்கே சென்று, அந்தப் பெண் ஏன் அழுதுகொண்டிருக்கிறாள்"என்று தெரிந்துகொண்டு வா" என்று அனுப்புகிறார். அந்த மாணவனும் உடனே ஓடிச்சென்று, "அம்மா நீங்கள் ஏன் அழுதுகொண்டு இருக்கிறீர்கள்" என்று கேட்கிறார். அதற்கு அப்பெண், "சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்டிற்கு வந்த என் அப்பாவை புலி ஒன்று கொன்றுவிட்டது. அதன்பிறகு சில மாதங்கள் கழித்து இந்தக் காட்டில் எனது கணவரும் சிங்கம் ஒன்றால் கொல்லப்பட்டார். இதனால் நான் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். இந்த வேதனை மறைவதற்குள்ளாக போன வாரம் எனது ஒரே மகனை யானை ஒன்று தாக்கிக் கொன்றுவிட்டது" என்று கூறுகிறாள். இதனைக் கேட்டதும் வேதனை தங்க முடியாத அந்த மாணவன் ஆசிரியரிடம் ஓடிவந்து, “பாவம் ஐயா அந்தப் பெண்! தனது தந்தை, கணவன், மகன் என எல்லரையும் இழந்து நிற்கிறாள்" என்று வேதனைப்பொங்க தெரிவிக்கிறான். அப்போது ஆசிரியர் அவனிடம், "அதுசரி, எல்லாரையும் இழந்தபிறகு அவள் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறாள்" என்று கேட்கிறார். "எனக்குத் தெரியவில்லை ஐயா" என்கிறான் அவன். "சரி, நீ மறுபடியும் அவளிடம் ஓடிச்சென்று அதற்கான காரணத்தைக் கேட்டு வா" என்று அனுப்புகிறார் ஆசிரியர். உடனே அப்பெண்ணிடம் ஓடிச்சென்று அதற்கான காரணத்தை வினவுகிறார் மாணவர். அதற்கு அப்பெண், “எல்லாரும் இறந்துபோனதுக்கு அப்புறமும் நான் உயிரோடு இருப்பதற்கு காரணம், இந்த நாட்டில் இருக்கின்ற எங்கள் மன்னரும் அவர் தரும் நல்லாட்சியும்தான்" என்கிறாள். இதனை அம்மாணவன் ஆசிரியரிடம் வந்து கூறியபோது, "உண்மைதான் மாணவர்களே, ஒரு நாட்டில் அன்பும், நீதியும், நேர்மையும், இரக்கமும், அமைதியும் கொண்ட நல்லதொரு ஆட்சியை ஒரு அரசர் தருவாரேயானால், அந்நாட்டு மக்கள் தங்களுக்கு எப்படிப்பட்ட துன்ப துயரங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்வார்கள்" என்கிறார்.

இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். கிறிஸ்துவே அனைத்து உலகிற்குமான ஒப்பற்ற அரசர் என்று அவரை இந்நாளில் போற்றி மகிழ்கின்றோம். இன்றைய நம் உலகில் ஆட்சி அதிகாரமும், அதிகார வெறியும், ஆணவப்போக்கும் கொண்டு மக்களை ஆட்சி செய்யும் தலைவர்களைத்தான் காண்கின்றோம். அதனால்தான் உலகில் போர்களும், வன்முறைகளும், மோதல்களும், பிளவுகளும், பிரிவினைகளும், தீவிரவாதமும் பயங்கரவாதமும் நிலவி வருகின்றன. "அதிகாரம் மனிதனைக் கெடுத்துவிடும், அளவுக்கு மிஞ்சிய அதிகாரம் அடியோடு கெடுத்துவிடும்” என்ற ஆக்டன் பிரபுவின் உலகப் புகழ் பெற்ற கூற்று இங்கே மிகவும் பொருத்தம் உடையதாக இருக்கின்றது. பொதுவாக உலகில் இரண்டுவிதமான தலைமைத்துவத்தைப் பார்க்கின்றோம். "Leadership is not a status, but it is state" அதாவது, தலைமைத்துவம் என்பது அந்தஸ்து அல்ல, மாறாக, அது ஒரு பொறுப்புணர்வு. அந்தஸ்து என்பது, ஆட்சி, அதிகாரம், பணம், புகழ், செல்வாக்கு, போர்கள், மோதல்கள்,  வன்முறைகள் இவற்றை உள்ளடக்கியது. ஆனால் பொறுப்புணர்வு என்பது சமூக நீதி, சமத்துவம் சகோதரத்துவம், அன்பு, அமைதி, பரிவிரக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. நமதாண்டவர் இயேசு இத்தகைய அரசாட்சியையே அமைக்க விரும்பினார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நம்க்கு எடுத்துரைக்கிறது. இப்போது அந்த இறைவார்த்தைகளுக்கு செவிமடுப்போம். இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும்  அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது. ஆக, இயேசுவின் இறையாட்சி என்றுமே அழிவுறாது, அது என்றென்றும் எக்காலத்திற்கும் நீடித்து நிலைத்து நிற்கக் கூடியது. இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், “அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே என்று திருத்தூதர் யோவான் உரைக்கின்றார்.

அரசியல் மெசியா (political Messiah)

இயேசுவின் பணிவாழ்வின் பல கட்டங்களில் அவர் ஆற்றிய அருளடையாளங்களையும் அதிசயங்களையும் கண்டவர்கள் இவர்தான் வரவிருக்கும் மெசியா, அதாவது, மீட்பர் என்று நம்பினர். இதில் தலைமைக் குருக்களும், மூப்பர்களும், மறைநூல் அறிஞர்களும் அடங்குவர். காரணம், சாலமோனின் அரசாட்சிக்குப் பிறகு இஸ்ரயேல் மக்கள் வடக்கு தெற்கு என இரண்டு குலங்களாகப் பிரிந்துபோயினர். பிறகு எதிரி நாட்டு மன்னர்களால் நாடு கட்டத்தப்பட்டனர். சில ஆண்டுகள் கழித்து அவர்களில் சிலர் சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இயேசுவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் உரோமையர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். ஆகவே, இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட தாவீதின் வழித்தோன்றலான மெசியா என்னும் அரசர், மீட்பர் வரும்போது, அவர் வாள்கொண்டு போரிட்டு எதிரிகளை அழித்தொழித்து நமக்கு நிரந்தமான விடுதலையைத் தருவார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால்தான், வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைந்தபோது, “ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” (காண்க மாற் 11:9-10) என்று மக்கள் ஆர்பரிக்கின்றனர். இது 'அரசியல் மெசியாவுக்கான' (political Messiah) ஓர் எதிர்பார்ப்பு. நாம் மேற்கண்ட தலைமைத்துவம் என்றால் அந்தஸ்து என்பதை அடிப்டையாகக் கொண்டது. அதுமட்டுமன்றி, தனது நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசுவின் மூதாதையரைப் பட்டியலிடும் மத்தேயு நற்செய்தியாளர், அவர் யூதாவின் குலத்தில் பிறந்ததாகவே பதிவுசெய்கின்றார் (காண்க மத் 1:1). காரணம், யூதாவின் குலம் அரச குலம். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்தவர்களின் (பின்னர் இஸ்ரேல் மற்றும் யூதா) குழு  42 அரசர்கள் மற்றும் ஓர்  அரசியை கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவாக இருந்தது. மேலும் இக்குழு கிமு 1052 முதல் கிமு 586 வரை ஆட்சி செய்தது. இவர்களில் சிலர் தங்கள் ஆட்சியின்போது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மத மறுமலர்ச்சியையும் அமைதியையும் கொண்டு வந்த அறிவார்ந்த நபர்கள். ஆகவே, இவர்களின் வழித்தோன்றலாக வரும் இயேசு என்னும் அரசர் (மீட்பர்) உரோமையர்களிடமிருந்து தங்களை விடுவித்து நல்லாட்சித் தருவார் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதும் கண்கூடு.

'துன்புறும் மெசியா' (suffering messiah)

ஆனால் இயேசு என்னும் மீட்பர் வெளிப்படுத்தியது 'துன்புறும் மெசியா' (suffering messiah). அதாவது, தலைமைத்துவம் என்பது பொறுப்புணர்வு என்பதை அடிப்படையாகக் கொண்டது. இது நம் மேற்சொன்னது போன்று  சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. துன்புறும் மக்களுடன் துன்புற்று அவர்களுக்கு விடுதலை (நிறைவாழ்வு மற்றும் நிலைவாழ்வு) அளிப்பதை இயேசு என்னும் மெசியா தனது நோக்கமாகக் கொண்டிருந்தார். இதே மனநிலை இறைத்தந்தையிடமும் வெளிப்படுவதை பழைய ஏற்பாட்டில் பார்க்கின்றோம். "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே, எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்" (காண்க விப 3:7-8). அவ்வாறே, இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின்பு தூய ஆவியார் திருத்தூதர்களை உண்மையையும் நேர்மையையும் கொண்டதொரு குழுமமாக வழிநடத்துவதைப் பார்க்கின்றோம் ஆக, கடவுளின் இறையாட்சி என்பது அனைத்து மக்களுக்கும் விடுதலை அளிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டது. ஆகவேதான், உரோமையர்களின் அடக்குமுறை அரசியலை,  அவர்களின் கடவுளற்ற அரசியலை, ஆட்சி, அதிகாரம், பணம், பதவி, மற்றும் செல்வாக்கை உள்ளடக்கிய இவ்வுலகப் போக்கிற்கான அரசியலை, மனமாற்றம் இல்லாத அரசியலை, பணி புரிவதற்குப் பதிலாகப் பணியேற்கின்ற அரசியலை இயேசு அடியோடு வெறுத்தார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

இயேசு ஆளுநன் பிலாத்து முன்பாக குற்றவாளியாக நிறுத்தப்பட்டபோது அவனுடைய விசாரணை எப்படி அமைந்திருந்தது என்பதை இன்றைய நற்செய்தி நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. யூதத் தலைவர்கள் இயேசுவின்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளைக் குறித்தெல்லாம் பிலாத்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவனுடைய கவலையெல்லாம் இயேசு ஓர் அரசராக உருவெடுத்து தன்னை வாள்கொண்டு வீழ்த்திவிடுவாரோ என்ற அச்சம் மட்டும்தான். காரணம், அவனுக்கு அந்தப் பதவி முக்கியம். அவனொரு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதற்கு  அவனது கைகழுவும் நிகழ்வு ஒன்றே போதும். இயேசு யூத மக்களின் அரசராகிவிடக் கூடாது என்பதில் ஒருவிதத்தில் அவனும் உறுதியாக இருந்தான். அதனால்தான் அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று வினவுகிறான். இதற்கு இரண்டுவிதமான பதில்களை இயேசு அவனுக்குத் தருகின்றார். முதலாவது, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்கிறார். அதாவது, தன்னைப் பற்றியும், தனது செயல்களைப் பற்றியும் அறிந்துகொண்டு கேட்கின்றானா அல்லது யூதர்கள் தன்மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்பதற்காகக் கேட்கின்றானா என்பதை அறிந்தே இந்தக் கேள்வியை பிலாத்திடம் எழுப்புகிறார் இயேசு. ஏனென்றால் பிலாத்தின் கேள்வியில் அவனது பதவிமோகம் வெளிப்படுகிறது. அதாவது, அவனது பதவிக்கு எவ்விதத்திலும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று எண்ணுகிறான்.

இரண்டாவதாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல" என்று இயேசு பிலாத்திடம் கூறுவதன் வழியாக, யூதரின் அரசராக அவர் இவ்வுலகின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார். அதேவேளையில், இவ்வுலகம் விரும்புகின்ற ஆட்சியைத் தான் அமைக்க விரும்பியிருந்தால் அதனைத் தன்னால் செய்திருக்க முடியும் என்பதை, "அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்று விளக்குகின்றார். கெத்சமனித் தோட்டத்தில் இயேசுவைக் கைது செய்யும் நிலையில் அங்கு என்ன நிகழ்கிறது? அப்போது இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத்  துண்டிக்கிறார். இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?”  (காண்க மத் 26:51-54) என்கிறார். ஆக, இயேசு சிறியதொரு நாட்டை ஆளும் அரசரும் அல்ல; யூதர்களும் பிலாத்தும் எண்ணியதுபோல அரசியலில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தனதாக்கிக்கொள்ள வந்தவரும் அல்ல. இயேசு ஓர் ஆன்மிக அரசர், நிலைவாழ்வு அளிக்கும் அரசர், நிறைவாழ்வின் அரசர், மனித இதயங்களில் வீற்றிருந்து ஆட்சி செய்யும் அரசர். அவரது இறையாட்சியில் எல்லாருக்கும் இடமளிப்பவர். சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு, கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் கடந்த நிலையில் தன்னிடம் நம்பிக்கைக்கொள்ளும் அனைவரையும் தனது ஆட்சியில் பங்குகொள்ளச் செய்பவர் (காண்க. லூக் 13:29). அதனால்தான் “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல" என்று பிலாத்திடம் உறுதிப்படக் கூறுகின்றார் இயேசு.

நமது நிலைப்பாடு என்ன? (நாம் எந்தப் பக்கம்?)

ஆனால் இப்படிப்பட்ட அரசியல் மெசியாவின் பக்கம் நின்றுகொண்டுதானே இன்றைய நமது கிறிஸ்தவ வாழ்வை கீழான நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கின்றோம்? குறிப்பாக இத்தகைய மனநிலை துறவியரிடம் அதிகம் இருப்பதைப் பார்க்கின்றோம். ஆட்சி அதிகாரம், பதவிமோகம், பெயர், பணம், புகழ், செல்வாக்கு ஆகிய இவ்வுலக காரியங்களை அடையவேண்டும் என்கின்ற தவறான நோக்கத்தை மனதில் கொண்டு, நாம் சார்ந்திருக்கின்ற சபையின் நற்பெயரைக் கெடுப்பதும், பொறுப்புக்கு வரவிருக்கும் தகுதியானவர்களின் பெயரைக் கெடுப்பதும், அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதும், இன்னார்தான் பதவிக்கு வரவேண்டும் என்று அவர்களுக்காக அரசியவாதிகளைப் போல மறைமுகமாகவும் நேர்முகமாகவும் தங்கள் சபையினரிடம் ஒட்டுக்கேட்பதும் அரசியல் மெசியா பக்கம் நிற்பதற்குச் சமம்தானே! இந்த இழிவான செயல்களை என்று நாம் விட்டுவிடப் போகிறோம்? கடவுளுக்கு உகந்ததைத் தேடுவதும், அதனையே திருஅவைக்கும் சபைக்கும் செய்வதும், தேவையில் இருக்கும் துன்புறும் மக்களின் சார்பாகப் போராடுவதும், அவர்களின் விடுதலை வாழ்வுக்காக உழைப்பதும்தான் துன்புறும் மெசியா பக்கம் நிற்பதாக அர்த்தம். இந்த உண்மையை எப்போது நாம் உணரப்போகிறோம்?

ஆக, உண்மையில்  அரசாள்வது என்பது துன்புறும் மக்களுடன் துன்புற்று அவர்களுக்கு விடுதலை வாழ்வை அளிப்பது என்பதை எடுத்துக்காட்டி இன்றும் நம்மை ஆட்சி செய்யும் ஒப்பற்ற அரசராம் கிறிஸ்துவின் பக்கம் நின்று பணியாற்றுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் கிறிஸ்து அரசரிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2024, 13:28