ҽ

மனித உடன்பிறந்த நிலை  ஏடு கையெழுத்திடப்பட்டபோது(04.02.19) மனித உடன்பிறந்த நிலை ஏடு கையெழுத்திடப்பட்டபோது(04.02.19)  (ANSA)

2024ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது

மனித குல மேம்பாட்டிற்கும், அமைதியான இணக்கவாழ்வுக்கும் உழைப்போருக்கு வழங்கப்படும் சையது விருது 10 இலட்சம் டாலர் பரிசுத்தொகையை உள்ளடக்கியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2024ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது ஒரு கத்தோலிக்க அருள்சகோதரி உட்பட, இரு தனியார்களுக்கும், இரு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடன்பிறந்த நிலைகளுக்கான சையத் விருது இவ்வாண்டில், சிறைக் கைதிகளிடையே சேவையாற்றும் சிலே நாட்டின் அருள்சகோதரி Nelly León Correa, எகிப்து நாட்டு இதய அறுவை சிகிச்சை நிபுணர் Magdi Yacoub அவர்களுக்கும், இந்தோனேசியாவின் இரு இஸ்லாமிய அமைப்புக்களான Nahdlatul Ulama, Muhammadiyah ஆகியவைகளுக்கு இணைந்தும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடன்பிறந்த உணர்வு நிலை குறித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த ஏடு, திருத்தந்தைக்கும் Al-Azhar தலைமைக் குருவுக்கும் இடையே 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி கையெழுத்திடப்பட்டதை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, தற்போது ஐந்தாவது ஆண்டாக வெள்ளிக்கிழமை காலை அபுதாபியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதகுல மேம்பாட்டிற்கும், அமைதியான இணக்கவாழ்வுக்கும் உழைப்போருக்கு வழங்கப்படும் இவ்விருதைப் பெறுபவருள் ஒருவரான சிலே நாட்டு அருள்சகோதரி Nelly León Correa அவர்கள், கடந்த 25 ஆண்டுகளாக பெண் கைதிகளிடையே பணியாற்றிவந்துள்ளார்.

ஏழை மக்களிடையேப் பணியாற்றி பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக எகிப்து நாட்டின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் Magdi Yacoub அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

இது தவிர, இந்தோனேசியாவின் இரு இஸ்லாமிய அமைப்புக்களான Nahdlatul Ulama, Muhammadiyah ஆகியவைகள் இணைந்து இந்த விருதைப் பெறுகின்றன. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஏழ்மை ஒழிப்புத் திட்டங்கள் என்பவை வழியாக இவைகள் ஆற்றிவரும் மனிதாபிமான மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கென மனித உடன்பிறந்த நிலை சையத் விருது இவ்விரு நிறுவனங்களுக்கும் இணைந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று விருதாளர்கள் ஒவ்வொருவரும் 10 இலட்சம் அமெரிக்க டாலர்களைப் பரிசாகப் பெறுவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2024, 15:34