ҽ

திருச்சிலுவை திருச்சிலுவை   (ANSA)

கிறிஸ்துமஸ் தினத்தில் வட நைஜிரியாவில் 140 பேர் படுகொலை!

கிறிஸ்வர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று நைஜீரியாவிலுள்ள Amnesty என்று என்ற அனைத்துலக அமைப்பின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வட-மத்திய நைஜீரியாவின் Plateau மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் ஏறத்தாழ 140 பேர் கொல்லப்பட்டனர் என்றும் மற்றவர்களைக் காணவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டில் 'கொள்ளைக்காரர்கள்' என்று அழைக்கப்படும் இராணுவக் கும்பல்கள், 20-க்கும் குறைவான வெவ்வேறு சமூகங்களில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தியதாகவும், டிசம்பர் 23, 24 அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளை எரித்ததாகவும், 25-ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு தினமான திங்களன்று, காலையிலும் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும்  அதிகாரிகளும், இத்தாக்குதலில் தப்பிழைத்தவர்களும் கூறியதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள Plateau மாநிலத்தின் ஆளுநர் Caleb Mutfwang அவர்கள், மாங்கு உள்ளூர் ஆளுநர் பகுதியில் மட்டும் திங்கள்கிழமை 15 பேர் அடக்கம் செய்யப்பட்டதாகவும், போக்கோஸில் உள்ள அதிகாரிகள் இறந்தவர்களில் 100 உடல்களுக்குக் குறையாமல் எண்ணியதாகவும் கூறினார். மேலும் தான் இன்னும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையையும் கணக்கிடவில்லை என்றும், இந்தத் தாக்குதல், Plateau மாநிலத்தில் எங்களுக்கு நடந்த மிகவும் திகிலூட்டும் கிறிஸ்துமஸ் என்றும் வர்ணித்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்தும் உள்ளூர் அதிகாரிகள் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலும் Plateau மாநிலத்தில் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள போக்கோஸ் மற்றும் பார்கின்-லாடி பகுதிகளில் 140 பேர் இறந்துள்ளனர் என்றும், இன்னும் சிலர் கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2023, 15:12