ҽ

அகழ்வாய்வில் பழைய இஸ்ரயேல் நகரம் அகழ்வாய்வில் பழைய இஸ்ரயேல் நகரம் 

தடம் தந்த தகைமை - யோனத்தானின் தலைமை

யோனத்தான் தம்முடன் இருந்தவர்களை நோக்கி, “நமக்கு முன்னும் பின்னும் போர் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய பகைவர்களிடமிருந்து காப்பாற்றப்பட விண்ணக இறைவனிடம் மன்றாடுங்கள்” என்றார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

யூதாவின் இறப்புக்குப்பின் நெறி கெட்டவர்கள் இஸ்ரயேல் எங்கும் தலைதூக்கினார்கள்; அநீதி செய்பவர்கள் அனைவரும் நடமாடினார்கள். அக்காலத்தில் பெரியதொரு பஞ்சம் ஏற்பட்டதால் நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். பாக்கீது இறைப்பற்றில்லாத மனிதர்களைத் தேர்ந்து கொண்டு அவர்களை நாட்டுக்குத் தலைவர்களாக ஏற்படுத்தினான். அவர்கள் யூதாவின் நண்பர்களைத் தேடிக்கண்டுபிடித்துப் பாக்கீதிடம் அவர்களை அழைத்துச்சென்றார்கள். அவன் அவர்களைப் பழிவாங்கி எள்ளி நகையாடினான். எனவே இஸ்ரயேலில் கடுந்துயர் ஏற்பட்டது. இறைவாக்கினர்களின் காலத்துக்குப் பின் அதுவரை அவர்களிடையே இவ்வாறு நேர்ந்ததில்லை.

யூதாவின் நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி யோனத்தானிடம், “உம் சகோதரரான யூதா இறந்தது முதல் நம் எதிரிகளையும் பாக்கீதையும் நம் இனத்தாருக்குள்ளேயே நம்மைப் பகைக்கிறவர்களையும் எதிர்த்துப் போராட அவரை ஒத்தவர் ஒருவரும் இல்லை. ஆதலால் நம் போர்களை நடத்திச்செல்ல அவருக்குப் பதிலாக இன்று உம்மையே எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் தேர்ந்து கொண்டோம்” என்றார்கள். அப்போது யோனத்தான் தம் சகோதரரான யூதாவுக்குப் பதிலாய்த் தலைமை ஏற்றார்.

இதை அறிந்த பாக்கீது அவரைக் கொல்லத் தேடினான். யோனத்தானும் அவருடைய சகோதரரான சீமோனும் அவரோடு இருந்தவர்களும் இதைக் கேள்வியுற்று, தெக்கோவா எனும் பாலைநிலத்திற்கு ஓடிப்போய் ஆஸ்பார் குளத்து அருகே பாசறை அமைத்தார்கள். இதை ஓய்வுநாளில் அறியவந்த பாக்கீது தன் படைகள் அனைத்துடன் யோர்தானைக் கடந்தான்.

யோனத்தான் தம்முடன் இருந்தவர்களை நோக்கி, “நாம் இப்போது எழுந்து நம்முடைய உயிருக்காகப் போராடுவோம்; ஏனெனில் முன்னைய நிலைமையைவிட இக்கட்டான நிலைமையில் இப்போது இருக்கிறோம். பாருங்கள்! நமக்கு முன்னும் பின்னும் போர் நடந்து கொண்டிருக்கிறது. யோர்தானின் நீர் இரு பக்கமும் உள்ளது; அதுபோலச் சதுப்பு நிலங்களும் காடுகளும் உள்ளன. நாம் தப்பிக்கவே வழி இல்லை. நம்முடைய பகைவர்களிடமிருந்து காப்பாற்றப்பட விண்ணக இறைவனிடம் மன்றாடுங்கள்” என்றார்.

போர் தொடங்கியது. பாக்கீதைத் தாக்க யோனத்தான் கையை ஓங்கினார். ஆனால் அவன் தப்பிப் பின்னடைந்தான். யோனத்தானும் அவரோடு இருந்தவர்களும் யோர்தானில் குதித்து அக்கரைக்கு நீந்திச் சென்றார்கள். ஆனால் பகைவர்கள் யோர்தானைக் கடந்து அவர்களை எதிர்த்து வரவில்லை. அன்று பாக்கீதின் படையில் ஆயிரம் பேர் மடிந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2023, 09:13