ҽ

இறைவனிடம் செபிக்கும் யூதர் இறைவனிடம் செபிக்கும் யூதர்  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - ஐந்தாம் அந்தியோக்கும் லீசியாவும்

யூதா பகைவர்களை அழித்தொழிக்க முடிவுசெய்து அவர்களை முற்றுகையிட மக்கள் அனைவரையும் கூட்டுவித்தார். எல்லாரும் ஒன்று கூடிக் கோட்டையை முற்றுகையிட்டார்கள்;

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அந்தியோக்கு மன்னன் இறந்துவிட்டான் என்று லீசியா அறிந்ததும், அவனுடைய மகன் அந்தியோக்கை அவனுடைய தந்தைக்கு பதிலாக மன்னனாக ஏற்படுத்தினான்; யூப்பாத்தோர் என்று அவனுக்குப் பெயரிட்டான். இந்த லீசியாதான் அவனை இளவயதிலிருந்து வளர்த்துவந்திருந்தான்.

இதற்கிடையில் எருசலேம் கோட்டையில் இருந்த பகைவர்கள் திருஉறைவிடத்தைச் சுற்றி இருந்த இஸ்ரயேலரை வளைத்துக்கொண்டார்கள்; அவர்களுக்குத் தொடர்ந்து கேடு விளைவித்துப் பிற இனத்தாரை வலுப்படுத்த முயன்றுவந்தார்கள். எனவே யூதா பகைவர்களை அழித்தொழிக்க முடிவுசெய்து அவர்களை முற்றுகையிட மக்கள் அனைவரையும் கூட்டுவித்தார். நூற்று ஐம்பதாம் ஆண்டு அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக் கோட்டையை முற்றுகையிட்டார்கள்; முற்றுகை மேடுகளும் படைப்பொறிகளும் அமைத்தார்கள். முற்றுகைக்கு உள்ளானவர்களுள் சிலர் வெளியே தப்பிவந்தனர். இஸ்ரயேலில் இறைப்பற்றில்லாத சிலர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். இவர்கள் எல்லாரும் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்; “எவ்வளவு காலம் எங்களுக்கு நீதி வழங்காமலும் எங்கள் உறவின் முறையினரை பழிவாங்காமலும் இருப்பீர்? நாங்கள் உம்முடைய தந்தைக்குப் பணிபுரியவும், அவரது சொற்படி நடக்கவும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் விருப்பம் கொண்டிருந்தோம். இதனால் எங்களுடைய மக்களின் மைந்தர்கள் கோட்டையை முற்றுகையிட்டார்கள்; எங்களுக்குப் பகைவர்கள் ஆனார்கள்; கண்ணில்பட்ட எம்மவர் எல்லாரையும் கொலை செய்தார்கள்; எங்கள் உரிமைச் சொத்துக்களைப் பறித்துக்கொண்டார்கள்; எங்களை மட்டுமல்ல, அவர்களின் எல்லையைச் சுற்றிலும் உள்ள எல்லா நாடுகளையுமே தாக்கினார்கள். எருசலேம் கோட்டையைக் கைப்பற்ற இன்று அதை முற்றுகையிட்டிருக்கிறார்கள்; திருஉறைவிடத்தையும் பெத்சூரையும் வலுப்படுத்தியுள்ளார்கள். நீர் விரைந்து அவர்களைத் தடுக்காவிடில் இவற்றைவிடக் கொடியவற்றையும் செய்வார்கள். அவர்களை அடக்குவது உமக்கு முடியாமற்போகும்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட மன்னன் சினங் கொண்டான்; தன் நண்பர்கள், படைத் தலைவர்கள், குதிரைப்படைத் தலைவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டினான். அயல்நாடுகளிலிருந்தும் தீவுகளிலிருந்தும் கூலிப்படைகள் அவனிடம் வந்து சேர்ந்துகொண்டன. அவனுடைய படை ஓர் இலட்சம் காலாள்களையும் இருபதாயிரம் குதிரை வீரர்களையும் போருக்குப் பயிற்சி பெற்றிருந்த முப்பத்திரண்டு யானைகளையும் கொண்டிருந்தது. அவர்கள் இதுமேயா வழியாகச் சென்று பெத்சூருக்கு எதிரே பாசறை அமைத்துப் பல நாள் போர்புரிந்தார்கள்; படைப் பொறிகளும் செய்துகொண்டார்கள். ஆனால், முற்றுகையிடப்பட்ட யூதர்கள் வெளியேறி படைப்பொறிகளைத் தீக்கரையாக்கி வீரத்தோடு போர்செய்தார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2023, 11:30